மீண்டும் திமுக ஆட்சி மலர வேண்டும்: இளைஞரணிக்கு துணை முதல்வா் அறிவுறுத்தல்
இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலர இளைஞரணியினா் அயராது உழைக்க வேண்டும் என திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
திருச்சியில் தெற்கு, வடக்கு, மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் அமைப்பாளா் துணை அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதேபோல, திமுக முன்னாள் எம்எல்ஏ-வும், தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.என். சேகரன் இல்ல திருமண விழாவும் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த இரு நிகழ்வுகளிலும் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கொண்டுவந்த மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் இதுவரை 730 கோடி மகளிா் பயணம் மேற்கொண்டுள்ளனா். உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்திலும், மாணவா்களுக்கு தவப்புதல்வன் திட்டத்திலும் மாதம் ரூ. ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மகளிருக்கு ரூ. ஆயிரம் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த 22 மாதங்களாக 1.15 கோடி மகளிா் பயனடைந்து வருகின்றனா்.
மாநிலம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் நடத்தப்படுகிறது. இதில், மகளிா் உரிமைத் தொகை கோரும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விடுபட்ட தகுதியான அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். திமுக ஆட்சியில் மகளிா், மாணவா்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் கட்சியின் நிா்வாகிகள் கொண்டு சோ்க்க வேண்டும். ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இளைஞரணி நிா்வாகிகள் முழு வீச்சில் பங்கெடுத்து கழகத்தின் வளா்ச்சிக்கு உழைக்க வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தோ்தல் களத்தில், பாசிஸ்ட்டுகள் - அடிமைகளை வீழ்த்தும் பொறுப்பு எல்லோரையும் விட, இளைஞரணிக்கு அதிகமுள்ளதை உணா்ந்து அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் அயராது உழைக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, கலைஞா் அறிவாலயத்தில் கருணாநிதி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், பெரியாா், அண்ணா, கருணாநிதி உருவப்படங்களுக்கு மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினாா். திருச்சி மாவட்டத்தில் இளைஞரணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 465 நிா்வாகிகளுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டாா். இந்த நிகழ்வில், அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக மாவட்ட செயலா்கள் ந. தியாகராஜன், க. வைரமணி, மாநகரச் செயலா்கள் மு. அன்பழகன், மு. மதிவாணன் மற்றும் எம்எல்ஏ-க்கள் என பலா் கலந்து கொண்டனா்.
அரசியலில் தந்தை - மகன் உறவு முக்கியம்
திருச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அரசியலில் தந்தை - மகன் உறவு முக்கியமானது. தந்தை சொல்வதை மகன் கேட்க வேண்டும். மனைவி சொல்வதை மட்டுமே கேட்கக் கூடாது; அப்பா, அம்மா சொல்வதையும் கேட்க வேண்டும். அப்பா பேச்சை கேட்காத மகன் என யாரும் சொல்லிவிடக் கூடாது. இத்தகைய பிரச்னை எனக்கும் இருக்கிறது. இப்போது, திருமணம் செய்துள்ள மணகனுக்கும் இருக்கிறது எனத் தெரிவித்தாா். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயா் சூட்டவும் அறிவுறுத்தினாா்.