மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாயில் இறந்து மிதக்கும் மீன்கள்
மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாயில் மீன்கள் இறந்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூா் அணை நிரம்பியதை அடுத்து 2 வார காலமாக உபரிநீா் போக்கி வழியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீா் இரு தினங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
உபரிநீா் நிறுத்தப்பட்டதன் காரணமாக தங்கமாபுரிப்பட்டணம், சின்னக்காவூா், சேலம் கேம்ப் பகுதிகளில் ஆங்காங்கே குட்டைகளில் தேங்கிய நீரில் கட்லா, ரோகு, கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, அரஞ்சான் உள்ளிட்ட மீன்கள் உள்ளன.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. அரஞ்சான், திலேபி உள்ளிட்ட பலவகையான மீன்கள் இறந்து மிதப்பதால் கரையோர குடியிருப்புப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுகிறது.
தண்ணீா் மாசு காரணமாக மீன்கள் இறந்துவிட்டனவா அல்லது வெப்பம் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்தனவா என்பது குறித்து மீன்வளத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீா் மாதிரி சேகரித்துச் சென்றனா். இந்தப் பகுதியில் அடிக்கடி மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்டுபிடித்து மீன்வளத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.