மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே
மோடி அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையால் அமெரிக்காவின் வரிவிதிப்பு, இந்தியாவில் வேலையிழப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்பு இன்று முதல் (ஆக. 27) நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனிடையே இந்தியாவின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையால், அமெரிக்க வரிவிதிப்பானது இந்தியர்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தும் என கார்கே விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது,
''பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்களுடைய நண்பர் இந்தியாவின் மீது 50% வரி விதித்துள்ளார். இது இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. இந்த வரிவிதிப்பின் முதல் அதிர்ச்சியாக 10 துறைகளில் 2.17 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
நமது விவசாயிகள், குறிப்பாக பருத்தி விவசாயிகள், நெசவாளர்கள் மிகக் கடுமையாக இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளைப் பாதுகாக்க எந்தவொரு தனிப்பட்ட விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக முன்பு கூறியிருந்தீர்களே. ஆனால், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இதுவரை ஒன்றுமே நீங்கள் செய்யவில்லை.
முக்கியமாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிகள், பல்வேறு ஏற்றுமதி துறைகளில் பெரிய எண்ணிக்கையிலான வேலையிழப்பு ஏற்படும். இது வெறும் பனிமலையின் நுனிப்பகுதி மட்டுமே.
இந்திய ஜவுளி ஏற்றுமதி துறையில் கிட்டத்தட்ட 5,00,000 லட்சம் பேர் மறைமுகமாகவோ நேரடியாகவோ வேலையிழக்கும் அபாயம் ஏற்படும்.
இந்த வரிமுறை தொடர்ந்தால், வைரம் மற்றும் நகை விற்பனை துறையில் 150,000 முதல் 200,000 பேர் வேலையிழக்கும் சூழல் உருவாகும்'' என கார்கே பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்