வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்
பாஜக மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா? என்ற கோணத்திலும் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் முஸாஃபர்பூரில் இன்று(ஆக. 27) நடைபெற்ற ‘வாக்குரிமைப் பேரணியில்’ ராகுல் காந்தி பேசியதாவது: “உறுதியாகச் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள், நரேந்திர மோடி தேர்தல்களில் வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார்... நரேந்திர மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் உதவி புரிகிறது.
இந்தியாவில் முதல்முறையாக கடந்த 2014-க்கும் முன்னரே குஜராத்தில் வாக்குத் திருட்டு ஆரம்பமானது. அதன்பின், அதனை 2014-இல் அவர்கள் (பாஜக) தேசிய அளவில் செயல்படுத்தவும் ஆரம்பித்தனர்.
குஜராத் மாடல் என்பது பொருளாதார மாடல் ஒன்றும் அல்ல, அது வெறும் ‘வாக்குத் திருட்டு’ மாடல்!
மத்திய பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அவர்கள் தேர்தல்களைக் கொள்ளையடித்தார்கள். ஆனால், அப்போதெல்லாம் எங்களிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லாததால் எதைப்பற்றியும் வெளியில் பேசவில்லை.
ஆனால், மகாராஷ்டிரத்தில் வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துவிட்டோம். அங்கு, தேர்தல் ஆணையம் சுமார் 1 கோடி வாக்குகளை(வாக்காளர்களை) மக்களவை தேர்தலுக்குப்பின் சேர்த்தது. அவர்கள் அனைவரும் பாஜக பக்கம் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், ஹரியாணா, மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் மக்களவை தேர்தல்களில் எப்படி வாக்குகள் திருடப்பட்டன என்பதையும் ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “6 வயதே நிரம்பிய சிறு குழந்தைகளுக்குக்கூட இந்தியாவில் வாக்குத் திருட்டு நடைபெறுவது தெரிந்திருக்கிறது. ‘நரேந்திர மோடி வாக்குத் திருடன்’ என்று அந்தக் குழந்தைகள் சொல்வதையும், பிகாரில் என் கண்களால் பார்த்தேன். கடந்த சில நாள்களுக்கு முன், அமித் ஷா என்ன சொன்னார் - ‘அடுத்த 40 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் நீடிக்கும்’ என்றார் அமித் ஷா.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் அது தெரியாது. ஆனால், அமித் ஷாவால் மட்டும் அடுத்த 40 ஆண்டுகள் நடைபெறக்கூடியவை பற்றி அறிந்திருக்க முடிகிறது. எப்படி? அதுதான் வாக்குத் திருட்டு!” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.