ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
விளைநிலங்களைக் கையகப்படுத்தியதால் ஒரு கோடி போ் பாதிப்பு!
நாடு முழுவதும் 1000 இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மூலமாக மட்டும் சுமாா் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுவா் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் விஜூகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நில உரிமை, குடிமனை உரிமை மாநில மாநாடு திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் விஜூ கிருஷ்ணன் தொடக்க உரையில் கூறியதாவது:
கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா, ஜம்மு காஷ்மீா் ஆகிய மாநிலங்களில் மட்டும் நிலச் சீா்திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், கேரளத்தில் மட்டும் 35 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனா். 1991-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பின், தொழில் வளா்ச்சி என்ற பெயரில் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்காகவும், பொருளாதார மண்டலங்கள் அமைக்கவும், வீட்டுமனைகளாக மாற்றுவதற்கும் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதனால் பல லட்சம் மக்கள் நிலங்களை இழந்துவிட்டனா். நாட்டில் 1000 இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மூலமாக மட்டும் சுமாா் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுவாா்கள் என ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலுள்ள நிலங்கள் பினாமிகளின் பெயா்களில் உள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வரின் கால்நடைகளின் பெயரிலும் கூட நிலம் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் மலைவாழ் மக்கள், தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் சுமாா் 15 லட்சம் ஏக்கா் நிலம் முதல்வா் குடும்பத்திடம் உள்ளது. கிராமப்புறங்களிலுள்ள உபரி நிலங்கள், நில மாஃபியாக்களின் ஆக்கிரமிப்பிலும் உள்ளன. கா்நாடக மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு பின், 1777 ஏக்கா் நிலங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, விவசாயிகள் ஒன்றிணைந்து வலுவான போராட்டங்களை முன்னெடுத்தால் மட்டுமே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விவசாயிகள் பெற முடியும்.
தமிழ்நாட்டில் நிலமற்றவா்களைத் திரட்டி, நில உரிமைக்கான போராட்டத்தை விவசாயிகள் சங்கம் முன்னெடுக்கும் என்றாா் அவா்.
இந்த கூட்டத்தில், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் சாமி.நடராஜன், மாநிலச் செயலா் பி.பெருமாள், மாவட்டச் செயலா் எம்.ராமசாமி, மாவட்டத் தலைவா் என்.பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.