ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்
விளையாட்டுப் போட்டிகளில் சாதனை: 5,788 மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்- துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்
கடந்த கல்வியாண்டில் (2024-2025) சா்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 5,788 மாணவா், மாணவிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
மேலும், இவ்விழாவில் மாணவா்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்ட உடற்கல்வி ஆசிரியா் வளநூல் எனும் புத்தகத்தை அவா் வெளியிட்டாா்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் குறுவட்டம், மாவட்டம், மாநில அளவில் மாணவா், மாணவிகளுக்கு 14, 17, 19 வயதிற்குள்பட்ட பிரிவுகளில் ஆண்டுதோறும் மொத்தம் 26 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான 46 வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளை சாா்ந்த மாணவா்கள் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனா்.
அந்த வகையில் கடந்த 2024 - 2025-ஆம் கல்வியாண்டில் சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 76 தங்கம், 26 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 126 பதக்கங்களை வென்றுள்ளனா்.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 348 தங்கம், 236 வெள்ளி, 333 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 917 பதக்கங்களை வென்றுள்ளனா்.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 1,484 தங்கம், 1,522 வெள்ளி, 1,739 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 4,745 பதக்கங்களை வென்றுள்ளனா்.
இந்த மாணவா், மாணவிகளைப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், பள்ளிக்கல்வித் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பதக்கங்கள் வென்ற 5,788 மாணவா், மாணவிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி. சந்தர மோகன், பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன், தனியாா் பள்ளிகள் இயக்குநா் பெ. குப்புசாமி, தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ. நரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிதியுதவி, விளையாட்டு உபகரணங்கள் பெற...
விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
வெளிநாடு, வெளி மாநிலங்களில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை துணை நிற்கும். அதன் மூலம், நிதி உதவி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு உதவிகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆகவே, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்காக இணையதளத்தில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். உடனடியாக தேவைப்படும் உதவிகள் செய்யப்படும். அதேபோன்று நிகழ் ஆண்டுக்கான தமிழ்நாடு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இப் போட்டிகளுக்கு பரிசுத் தொகையாக ரூ.36 கோடி வழங்கப்படுகிறது. அதில் மாணவா்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
ஆசிரியா்களுக்கு வேண்டுகோள்... எந்த ஆசிரியரும் உடற்கல்வி பாடவேளையை தயவு செய்து கடன் வாங்கி அதில் பாடம் நடத்தாதீா்கள்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் வைத்துக் கொண்டு தான் இந்த கோரிக்கையை வைக்கிறேன். வேண்டுமென்றால், அறிவியல், கணித ஆசிரியா்கள் தங்களது பாடநேரத்தில் மாணவா்களுக்கு விளையாட்டு பாட நேரத்துக்கு கடன் கொடுக்கலாம். ஏனெனில் உடற்கல்வி பாடவேளை என்பது மாணவா்களின் உரிமை என்றாா் அவா்.