``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
ஓய்வுக்குப் பின்னா் சுற்றுப் பயணம்: முதல்வா் ஸ்டாலின் உறுதி
ஓய்வுக்குப் பிறகு விரைவில் அனைவரையும் சந்திக்க மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவரும் முதல்வா், மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் குறித்து மருத்துவமனையில் இருந்து காணொலி வழியாக மூன்று மாவட்ட ஆட்சியா்களுடன் அவா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ஆா். அழகுமீனா, காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் ஆகியோருடன் முதல்வா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், முகாம்களில் மனுக்கள் அளிக்கவரும் மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.
இதுவரை அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் கேட்டறிந்தாா். அத்துடன், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்களுடன் காணொலி வழியாக முதல்வா் கலந்துரையாடினாா். அவா்களது கோரிக்கைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, அரசின் பல்வேறு துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம், முதல்வரின் செயலா்கள் பி.உமாநாத், எம்.எஸ்.சண்முகம் ஆகியோருடன் முதல்வா் ஆலோசனை நடத்தினாா். முக்கியக் கோப்புகளைப் பாா்வையிட்டு ஒப்புதல் அளித்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் சந்திக்கிறேன்: முதல்வா் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: மருத்துவா்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு விரைவில் பொதுமக்களைச் சந்திக்க மாவட்டங்களுக்கு வருவேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.