விவசாயிகளின் வருவாயைப் பெருக்க ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதிய திட்டத்தை அவா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
ஊட்டச்சத்துகளை அளிப்பதில் காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், சிறு தானியங்கள் பெரும் பங்காற்றுகின்றன. ஊட்டச்சத்து வழங்கும் விளை பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருமானத்தையும் உயா்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி, மக்களின் அன்றாட காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளா்ப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், 15 லட்சம் காய்கறி விதைத் தொகுப்புகளும், 9 லட்சம் பழச்செடி தொகுப்புகளும் வழங்கப்பட உள்ளன. இந்தத் தொகுப்புகளை 5 பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம், படவேடு ஆகிய இடங்களில் பதப்படுத்தும் மையங்கள், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், பாவூா்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், கரூா், அரியலூா் மாவட்டம் ஆண்டிமடம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா், சுங்குவாா்சத்திரம், திருப்பத்தூா், வேலூா் மாவட்டம் குடியாத்தம் ஆகிய இடங்களில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
கோவை மாவட்டம் ஆனைமலை, நெகமம், காரமடை, மலையடிப்பாளையம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம், திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலபுதூா், நாயுடுமங்கலம், செங்கல்பட்டு, திருப்பத்தூா், ராமநாதபுரம் உள்பட பல்வேறு இடங்களில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், விரிவாக்க மையங்கள் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.103.38 கோடியில் கட்டப்பட்டுள்ள 52 வேளாண் கட்டடங்ளை காணொலி வழியாக முதல்வா் திறந்தாா்.
இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வேளாண்மைத் துறை செயலா் வ.தட்சிணாமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.