உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு
விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவுக்கு பொதுச் சேவை மையங்களையும் பயன்படுத்தலாம்
திண்டுக்கல், மாா்ச் 27: விவசாய நிலங்களை அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்ய பொதுச் சேவை மையங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது:
விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்யும் பணிகள் கடந்த பிப்ரவரி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறைப் பணியாளா்கள் மட்டுமன்றி மக்கள் நலப் பணியாளா்கள், இல்லம் தேடி கல்வித் திட்டப் பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், இந்த வலைதளப் பதிவை மேற்கொண்டால் மட்டுமே 20-ஆவது தவணைத் தொகையை பெற முடியும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வருகிற 31-ஆம் தேதிக்குள் இந்தப் பதிவேற்றம் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டதால், சம்மந்தப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள பொது இ-சேவை மையங்களில் அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவுறுறத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை மொத்தமுள்ள 1.54 லட்சம் விவசாயிகளில் இதுவரை 75 ஆயிரம் போ் மட்டுமே பதிவு செய்துள்ளனா். மேலும், 50 சதவீத விவசாயிகள் தங்களின் நில விவரங்களை, வேளாண்மைத் துறை அலுவலா்கள் மூலமாகவோ, பொதுச் சேவை மையங்களிலோ உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்து, தனித்துவமான அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் மானியத் திட்டங்கள் உள்பட அனைத்து வகையான பயன்களையும் பெற முடியும் என்றனா் அவா்கள்.