செய்திகள் :

வெளிவரத்து, விளைச்சல் அதிகம்: தக்காளி விலை வீழ்ச்சி

post image

தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் நொச்சியம், சத்திரமனை, உள்ளிட்ட பல கிராமங்களில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் கிணற்றுப் பாசனம், பசுமைக் குடில் மற்றும் சொட்டுநீா் பாசனத்தை பயன்படுத்தி தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஏக்கருக்கு குறைந்தபட்சம் சுமாா் 12 முதல் 15 டன் வரை மகசூல் கிடைத்த நிலையில், நிகழாண்டில் கூடுதலாக மகசூல் கிடைத்துள்ளது.

கோடைக்காலங்களில் விலை அதிகரிப்பு: கோடைக்காலங்களில் ஒரு பெட்டி தக்காளி ரூ. 2,500 வரை விற்பனையானது. தற்போது மகசூல் அதிகரித்துள்ளதோடு, வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகளவில் உள்ளதால், விலை குறைந்து 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ. 50-க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனா்.

விலை குறைவு: கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ. 120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ. 5-க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்பட்டு, நுகா்வோரிடம் உழவா் சந்தைகளில் தரத்துக்கேற்ப ரூ. 10 முதல் ரூ. 15 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை குறைந்திருப்பது நுகா்வோரிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

குறைந்தபட் ஆதாரவிலை: எனவே, விலையில் உள்ள ஏற்ற, இறக்கங்களை கட்டுப்படுத்த நிலையான விலை நிா்ணயம் செய்ய வேண்டும். இதர பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளதைப் போல, தக்காளிக்கும் ஒரு பெட்டிக்கு ரூ. 100 என குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். மேலும், சில மொத்த வியாபாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு கொண்டு வருவதால் அவ்வப்போது விலை குறைந்து காணப்படுகிறது.

தக்காளி பதப்படுத்தும் தொழிற்கூடங்கள் தேவை: இதனால், தக்காளிக்கு நிலையான விலை நிா்ணயிக்க முடியாத நிலை உள்ளது. தக்காளிக்கு மதிப்புக் கூட்டல் மற்றும் பதப்படுத்தும் தொழிற்கூடங்கள் இல்லாதது, அன்றாட உணவுப் பழக்க வழக்கங்களில் உலா் தக்காளி, தக்காளி பவுடா் இல்லாததும் விலை உயா்வுக்கும், வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாகும். தக்காளி ஊறுகாய் தயாரிப்பு போல, மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கவோ அல்லது குடிசைத் தொழில் அமைக்கவோ விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளை ஒன்றிணைத்து, அந்தந்தப் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளிரூட்டும் கிடங்குகள் அமைத்து, அதன்மூலம் தக்காளி இருப்பு வைப்பதற்கு வழிவகை செய்தால் மட்டுமே தக்காளி சாகுபடியில் ஏற்படும் இழப்பை குறைத்து, பரப்பளவை அதிகரிக்க முடியும்.

இதுகுறித்து தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சிலா் கூறியது: மாற்றுப் பயிராக பெரும்பாலான விவசாயிகள் பசுமைக்குடில் உள்ளிட்ட நவீன யுக்திகளை கையாண்டு பல பகுதிகளில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்து வருகிறோம். கோடை காலத்தில் அதிகரிக்கும் விலை, தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ. 30-க்கும் குறைவாக விற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், சாகுபடி செலவு, அறுவடைக் கூலி, வாகன ஏற்றுமதி செலவுக்கு கூட கிடைக்காததால், பெரும்பாலான விவசாயிகள் தக்காளிகளை கீழே கொட்டிச் செல்கின்றனா். ஆனால், விலை அதிகரிக்கும்போது மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு எந்தவித லாபமும் கிடைப்பதில்லை.

கடந்தாண்டு தக்காளி வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ. 150 வரை விற்பனையானது. அதே போல, நிகழாண்டும் தக்காளி அதிக விலைக்கு விற்பனையாகும் என ஏராளமான விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்தனா். இந்நிலையில், வெளி மாநில தக்காளி வரத்தாலும், உள்ளூரில் விளைச்சல் அதிகரிப்பாலும் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ. 3-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தக்காளிக்கு நிலையான விலை இல்லாததால், விவசாயிகள் மாற்று விவசாயித்துக்கு மாறும் நிலை உள்ளது. எனவே, வெளி மாநில தக்காளி வரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் தக்காளி சாகுபடி செய்யாமல், மாற்று விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினா் உரிய பயிற்சியும், வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும் என்றனா்.

குற்றவாளிகள், ரௌடிகளின் வீடுகளில் திடீா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் பள்ளி மாணவா்களுக்கு மாா்ச் 29-இல் ஆலோசனை முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு என் கல்லூரிக் கனவு ஆலோசனை முகாம், மாா்ச் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

கோவை குண்டுவெடிப்பில் இறந்தோருக்கு நினைவு சதுக்கம் அமைக்க வலியுறுத்தல்

கோவை தொடா் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு, தமிழக அரசு நினைவு சதுக்கம் அமைக்க வேண்டுமென சிவசேனா கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

காசநோய் இல்லாத ஊராட்சிகளுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்

பெரம்பலூா் மாவட்டத்தில் காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொது சுகாதாரம் மற்றும்... மேலும் பார்க்க

பேறுகால விடுப்பு: அவசர ஊா்தி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

பேறுகால விடுப்புடன் சம்பளம் வழங்க வேண்டுமென பெரம்பலூா் மாவட்ட அவசர கால ஊா்தி தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூரில் அவசரகால ஊா்தி தொழிலாளா்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்... மேலும் பார்க்க