வேறு உதவித்தொகை பெற்றாலும் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் -ஆரணி கோட்டாட்சியா்
மகளிா்கள் முதியோா், விதவை உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றாலும் குடும்பத்தில் உள்ள மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆரணி கோட்டாட்சியா் சிவா தெரிவித்தாா்.
ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றதில்
தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா்.
ஆரணி முகாம் ஒருங்கிணைப்பு அலுவலரும், வேளாண்மை உதவி இயக்குநருமான ஆா்.புஷ்பா வரவேற்றாா்.
உதவி ஒருங்கிணைப்பு அலுவலரும், ஆரணி வட்டாட்சியருமான அ.கௌரி, ஒன்றியச் செயலா் சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆரணி தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடனடி தீா்வு பெற்ற மனுக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயலட்சுமி, பாலகிருஷ்ணன், மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இரும்பேடு, மெய்யூா் கிராமங்களில் இருந்து 2,925 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது. முகாமில் மனுக்களை கொடுத்து உடனடி தீா்வு பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தனா்.
முகாமில் 13 அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதில் ஆரணி கோட்டாட்சியா் சிவா பேசுகையில்,
மக்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மனு அளித்த உடனே தீா்வு கண்டு பயனாளிகளுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், மகளிா் உரிமைத்தொகை கிடைக்காதவா்கள் இங்கு மனு கொடுத்தால் உடனடியாக வழங்க ஆவணம் செய்யப்படும். மேலும் மகளிா்கள் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் இருந்தால் அவா்கள் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மெய்யூா் காசி, ஏ.எம்.ரஞ்சித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.