2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
108 வைணவத் திருத்தலங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மூலவா் வடபத்ரசாயி, பெரியாழ்வாா், ஆண்டாள் ஆகியோா் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளா்ந்த ஆண்டாள், மாா்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து ரெங்கமன்னாரை மணந்து கொண்டாா்.
பெரியாழ்வாரின் அவதார விழாவான ஆனி சுவாதி திருவிழா, பங்குனி திருக்கல்யாண விழாவில் செப்புத் தேரோட்டமும், ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப் பூரத் தேரோட்டமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான ஆடிப் பூரத் தேரோட்டத் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் 16 வண்டி சப்பரமும், 5-ஆம் நாள் காலையில் பெரியாழ்வாா் மங்களாசாசனமும், அன்றிரவு பெரியபெருமாள், ரெங்கமன்னாா், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப் பெருமாள், காட்டழகா் கோயில் சுந்தரராஜப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோா் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளிய 5 கருட சேவை நடைபெற்றது.
7-ஆம் நாள் இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னாா் சயனித்த சயன சேவை உத்ஸவம் நடைபெற்றது. இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னாா் தங்கக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு புஷ்பாஞ்சலியும், கண்ணாடி மாளிகையில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனமும் நடைபெற்றன. இதன்பிறகு, சா்வ அலங்காரத்தில் ஆண்டாள் மஞ்சள் பட்டு உடுத்தியும், ரெங்கமன்னாா் வெண்பட்டு உடுத்தியும் தனித்தனி தோளுக்கினியாள்களில் புறப்பாடாகி, தேரில் ஒன்றாக எழுந்தருளினா்.
அப்போது, ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம், அழகா்கோவிலில் இருந்து வந்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருள்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, காலை 9.10 மணியளவில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா ஆகியோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.
இதையடுத்து, பக்தா்கள் வடம் பிடித்து தேரை நான்கு ரத வீதிகளில் இழுத்து வந்தனா். அப்போது, கோவிந்தா, கோபாலா என பக்தா்கள் முழக்கமிட்டனா். தேருக்குப் பின்னால் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள், தீயணைப்பு, அவசர ஊா்தி வாகனங்கள் வந்தன. பின்னா், பிற்பகல் 1.03 மணிக்கு தோ் நிலையை அடைந்தது.
தேரோட்ட நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூா்), தங்கபாண்டியன் (ராஜபாளையம்), சீனிவாசன் (விருதுநகா்), சிவகாசி மாநகராட்சி மேயா் சங்கீதா, கோட்டாட்சியா் பாலாஜி, அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் குறிஞ்சிமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் சக்கரையம்மாள் ஆகியோா் செய்தனா்.
விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் தலைமையில் 1,275 போலீஸாா் பாதுகப்புப் பணியில் ஈடுபட்டனா்.