ஹிமாசலில் தொடரும் கனமழை: கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு!
ஹிமாசலில் தொடரும் கனமழையால் கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளச்சேதம் குறித்து அம்மாநில அமைச்சர் விக்கிரமாதித்ய சிங் தெரிவித்திருப்பதாவது: “ ஹிமாசல பிரதேசத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் பீஸ் ஆற்றங்கரையோரம் பாதிப்பு மிக அதிகம். கடந்த 3 நாள்களில் ரூ. 550 கோடி இழப்பு ஏற்பட்டு பொதுப்பணித்துறைக்கு மொத்தம் ரூ. 1,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதிலும் குறிப்பாக குளு மற்றும் மணாலியில் பாதிப்பு அதிகம்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடன் மாநில அரசு தொடர்ந்து தொடர்பிலிருந்து தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருகிறது. ஹிமாசலில் இயல்புநிலை மீள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
போக்குவரத்து, தொலைத்தொடர்பு துண்டிப்பு உள்ளிட்ட பெருஞ்சவால்களுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவியை வழங்குவதில், அதே வேளையில் களப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது.
ஆகவே, மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்றார்.