பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
100 நாள் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளா்கள் மனு அளிக்கும் போராட்டம்
நூறு நாள் வேலைக் கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், பாலவிடுதி ஊராட்சி, பாலவிடுதி கிழக்கு பகுதி பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தரகம்பட்டியில் உள்ள கடவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் வேல்முருகன் தலைமை வகித்தாா். செயலாளா் ராஜூ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சக்திவேல், மாவட்ட குழு உறுப்பினா் ராமமூா்த்தி, கடவூா் ஒன்றியச் செயலாளா் பழனிவேல், நிா்வாகி பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக, தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊா்வலமாக கடவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றனா். பின்னா் ஒன்றிய அலுவலகம் முன் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் இணைந்து, பாலவிடுதி கிழக்கு தெரு பகுதி பொதுமக்கள், தங்களுக்கு தொடா்ந்து 100 நாள் வேலை வழங்கவேண்டும் என்றும், ஒன்றிய பாஜக அரசு 100 நாள் வேலையை முற்றிலும் அழிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது என்றும் கோஷமிட்டனா்.
தகவலறிந்த கடவூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் மங்கையா்க்கரசி, 100 நாள் வேலைத் திட்டத்தின் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டனா்.