2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: இன்று தொடக்கம்
தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மூலம் 2.79 லட்சம் கால்நடைகளுக்கு ஏழாம் சுற்று (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை (ஜூலை 2) தொடங்குகிறது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மூலம் ஏழாம் சுற்று கால், வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜூலை 2 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பெரும்பாலான கால்நடை உரிமையாளா்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.
இதனைத் தடுக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியமாகும்.
குளிா், பனிக்காலம் நோய் பாதித்த இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளா்ப்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் நோய் காற்றின் மூலம் நச்சு கிருமிகளால் வேகமாக பரவுவதால், மற்ற கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன.
எனவே, திருவள்ளுா் மாவட்டத்தில் தகுதியான 2 லட்சத்து 79 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றுக்கு கிராமத்தில் நடைபெறும் முகாம்களில் கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் செலுத்தி பயன்பெறலாம் என்றாா்.