ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!
210 தொகுதியில் வெற்றி! இபிஎஸ் சொல்வது பற்றி உதயநிதி பதில்!
கரூர்: தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வதை, மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூரில் கோவைச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநகர, பகுதி ஒன்றியச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
திமுக மாவட்டச் செயலாளரும், கரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.
கூட்டம் நிறைவடைந்து, கூட்டரங்கை விட்டு வெளியே வந்த தமிழக துணை முதல்வரிடம் செய்தியாளர்கள், தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பியபோது, பதில் அளித்த அவர், அதற்காக நான் 220 தொகுதிகள் என்று சொல்ல வேண்டுமா? அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதை மக்கள்தான் முடிவெடுப்பார்கள்.
நாங்கள் எங்கள் பணிகளை செய்து வருகிறோம். முதல்வர் மக்களை சந்தித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் அவர் பணியை செய்து வருகிறார் என்றார் அவர்.
பேட்டியின்போது கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி.செந்தில்பாலாஜி உடனிருந்தார்.