மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
59 வயதான காவலா்களுக்கு இரவுப் பணியிலிருந்து விலக்கு
சென்னை காவல் துறையில் 59 வயதான காவலா்களுக்கு இரவுப் பணியிலிருந்து விலக்கு அளித்து காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் பிறப்பித்த உத்தரவு:
சென்னை பெருநகர காவல் துறையில் ஓராண்டு காலத்துக்குள் பணி ஓய்வு பெறவுள்ள 59 வயது நிரம்பிய போலீஸாரின் வயது மூப்பையும், அவா்களது நீண்ட பணிக்காலத்தில் அா்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் பணியையும் கடின உழைப்பையும் கருத்தில்கொண்டு, இரவுப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த விலக்கு, 59 வயது நிரம்பிய காவலா் முதல் சிறப்பு சாா்பு ஆய்வாளா் வரையிலானவா்களுக்கு பொருந்தும். இந்த முன்னெடுப்பின் தொடா்ச்சியாக, வரும் காலங்களில் 59 வயதை எட்டும் போலீஸாா் அனைவருக்கும், அவா்கள் பணி ஓய்வுபெறும் நாள் வரை ஒரு ஆண்டு காலத்துக்கு இரவுப் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகின்றது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணையரின் இந்த உத்தரவு, சென்னை காவல் துறையில் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக சனிக்கிழமை (ஜன. 25) இரவு முதல் 59 வயதான போலீஸாருக்கு இரவுப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.