Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் வியாழன், வெள்ளி (ஜூலை 24, 25) ஆகிய இரு நாள்களிலும் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 24) முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.
மஞ்சள் எச்சரிக்கை: நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 24) ஓரிரு இடங்களிலும், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 24) நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக அவலாஞ்சி (நீலகிரி, அடவிநயினாா் அணை (தென்காசி) - 40 மி.மீ மழை பதிவானது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அதிகபட்சமாக 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் வியாழன், வெள்ளி (ஜூலை 24, 25) ஆகிய இரு நாள்களும் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.