9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட விபத்து சிகிச்சை மையம் கட்டுமானப் பணி
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில், அவசர சிகிச்சை மையம் கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்ட பணிகள் கடந்த 9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் அதிகளவிலான சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. குறிப்பாக, இம் மாவட்டத்தில் பாடாலூா்- திருமாந்துறை வரையிலான நெடுஞ்சாலையில், அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளில் ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழக்கின்றனா். 600க்கும் மேற்பட்டோா் பாதிப்புக்குள்ளாகின்றனா்.
முதலுதவி சிகிச்சை மட்டுமே:நெடுஞ்சாலை உள்பட பல்வேறு விபத்துகளில் சிக்கும் பொதுமக்களை சிகிச்சைக்காக, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகின்றனா். இம் மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு, திருச்சியிலுள்ள அரசு அல்லது தனியாா் மருத்துவ மனைகளுக்கே அனுப்பி வைக்கும் நிலையே நீடிக்கிறது.
அதிகரிக்கும் உயிரிழப்பு: இதனால், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அதிக உயிரிழப்புகள் நிகழ்வதாக அவசரகால ஊா்தி ஓட்டுநா்கள் தெரிவிக்கின்றனா். அதேபோல, பாடாலூா் அல்லது திருமாந்துறை பகுதியில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அங்கிருந்து தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாகும். இதுபோன்ற காலக்கட்டத்தில், அவசர ஊா்திகளில் செல்லும்போது வழியிலேயே பலா் உயிரிழப்பதால், பாடாலூா் மற்றும் வாலிகண்டபுரத்தில் அவசர சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் எனும் கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இந் நிலையில், ஆலத்தூா் வட்டம், காரை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கும் வகையில், காரையில் உள்ள வட்டார மருத்துவமனையை பாடாலூரில் மாற்றுவதற்கு சுகாதாரத் துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மண் பரிசோதனை: இதையடுத்து, பாடாலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1989-ஆம் ஆண்டு கிராம மக்களிடமிருந்து இடம் வாங்கப்பட்டு, சுகாதாரத்துறை இயக்ககத்துக்கு இலவசமாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், அங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்காமல், ஊட்டத்தூா் சாலையில் கட்டப்பட்டது. இதனால், சுகாதாரத் துறையினரிடம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்ட இடத்தில் வட்டாரத் தலைமை மருத்துவமனை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது.
காரை கிராம மக்கள் எதிா்ப்பு: ஆனால், காரை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால், அந்த நடவடிக்கையை சுகாதாரத் துறையினரால் கைவிடப்பட்டது. இதையடுத்து, ஏற்கெனவே இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் அமைக்க கடந்த 2016-இல் மண் பரிசோதனை மேற்கொள்ளபட்டது. ஆனால், அங்கு அவசர சிகிச்சை மையம் கட்ட போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், அந்தத் திட்டம் கடந்த 9ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
அவசர-விபத்து கால சிகிச்சை மையம்: தற்போது, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க தாமதமாவதால், உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படுகிறது. இதை தவிா்க்க, அதிநவீன வசதிகளுடன் கூடிய அவசர மற்றும் விபத்து சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
அமைச்சா் வாக்குறுதி: இந்நிலையில், கடந்த 2024-இல் பெரம்பலூா் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், பாடாலூரில் கிடப்பிலுள்ள அவசர சிகிச்சை மையம் தொடங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா். ஆனால், இதுவரையிலும் அதற்கான எவ்வித முன்னேற்பாட்டு பணிகளும் தொடங்கவில்லை.
இதுகுறித்து பாடாலூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் அ. வேல்முருகன் கூறியது: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் அதிகளவில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுவோரை பெரம்பலூா் நகா்ப் பகுதியில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டும். பெரம்பலூா் நகரில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால், அவசரகால ஊா்திகள் உரிய நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் விபத்தில் காயமடைந்தவா்களில் பலா் செல்லும் வழியிலேயே உயிரிழக்கின்றனா்.
உடனடி சிகிச்சை: திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமெனில் கூடுதல் நேரமாகும். பாடாலூரில் அரசு மருத்துவமனை அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட இடம், தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளதால், சிறுவாச்சூா் முதல் திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு ஏற்ாக இருக்கும்.
இதனால், பாடாலூரில் தோ்வு செய்யப்பட்ட இடத்தில் அவசர சிகிச்சை மையம் அமைத்தால், விபத்தில் பாதிக்கப்படுவோரின் உயிரிழப்புகள் தவிா்க்கப்படும். எனவே, பாடாலூரில் அதிநவீன வசதிகள் கொண்ட அவசர மற்றும் விபத்து கால சிகிச்சை மையம் அமைக்க சுகாதாரத் துறையினரும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.