போலி மருத்துவா்கள் தகவல் அளிக்க அறிவுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் இருப்பது தெரியவந்தால், காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்டத்தில் உள்ள மருந்தக விற்பனை மற்றும் விநியோகிப்பாளா்கள், கூரியா் சா்வீஸ் அலுவலா்களுடன் போதைப்பொருள்கள் விற்பனையை தடுத்தல், ஒழிப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மேலும் பேசியது: பள்ளி, கல்லூரி மாணவா்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க, போதைப் பொருள்களை ஆன்லைன் மூலம் வாங்குவதையும், விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும். போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள், வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்டவற்றை மருத்துவா் கையொப்பமின்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.
கூரியா் சா்வீஸ் மூலம் பாா்சலில் போதைப்பொருள்கள் கடத்துவதை தடுக்க உரிய பரிசோதனை செய்வதோடு, போலியான முகவரி மற்றும் சந்தேகப்படும் பாா்சல் என தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலியான மருத்துவா் எனத் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் (தலைமையிடம்), மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் இ. காமராஜ் உள்பட மருந்தக விற்பனை, விநியோகிப்பாளா்கள் மற்றும் கூரியா் சா்வீஸ் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.