திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசன கட்டணத்தை ரூ.100-ஆக உயா்த்த முடிவு -...
Doctor Vikatan: சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
Doctor Vikatan: சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆரோக்கிய உணவா... பொதுவாக ஜிம் செல்வோர், உடற்பயிற்சி செய்வோர்தான் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதைப் பார்க்கிறோம். எல்லோரும் சாப்பிடலாமா, அதில் மாவுச்சத்தும் சர்க்கரைச்சத்தும் அதிகம்தானே... இனிப்பான அதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

கார்போஹைட்ரேட்டுக்கே மாற்றாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு மிகச் சிறப்பான ஓர் உணவு. அதாவது அரிசி சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக இதைச் சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள்கூட சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாம். வைட்டமின் ஏ, சி, மாங்கனீஸ் போன்ற சத்துகள் இதில் மிக அதிகம். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதிலுள்ள ஆந்தோசயனின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட், நல்ல செல்களை சிதைக்கும் ஃப்ரீ ராடிக்கல்ஸை குறைக்கக்கூடியது.
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து மிக அதிகம் என்பதால் குடல்நலம் பாதுகாக்கப்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற வைட்டமின் ஏ சத்தானது கண் பார்வையை வலுப்படுத்துகிறது.
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் ஊதா நிறம், ஆரஞ்சு நிறம் என இரண்டு வகை இருக்கும். ஆரஞ்சுநிற கிழங்கு வெளிநாடுகளில் அதிகம் கிடைக்கும். அதில் பீட்டா கரோட்டின் அளவு இன்னும் அதிகம். சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பொட்டாசியம் சத்தும் அதிகம். முதுமையில் சிலருக்கு சீக்கிரமே அல்சைமர் எனப்படும் மறதி பாதிப்பு வரும். அவர்களும் தினம் சிறிது சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாம். குழந்தைகளுக்குக்கூட திட உணவை அறிமுகப்படுத்தும்போது சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகைவைத்து மசித்துக் கொடுக்கலாம்.

விளையாட்டில் ஈடுபடுவோர் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதைப் பார்க்கலாம். அதற்குக் காரணம், அது கொடுக்கும் ஆற்றல் மற்றும் வைட்டமின் பி6 மற்றும் நயாசின் சத்துகள்தான். உடற்பயிற்சி செய்வோரும் ஆற்றலுக்காக சர்க்கரைவள்ளிக்கிழங்கை எடுத்துக்கொள்ளலாம். வயதானவர்கள் தினமும் 200 கிராம் அளவுக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால், செல்கள் பழுதுபார்க்கும் திறன் மேம்படும். சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கை ஆவியில் வேகவைத்துச் சாப்பிடுவது சிறந்தது. வேகவைத்து மசித்து சப்பாத்தி போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம். சிப்ஸ் போன்று செய்து சாப்பிட்டால் அதிலுள்ள சத்துகள் வீணாக வாய்ப்புள்ளதால் அதைத் தவிர்க்கலாம். தோலுடன் வேகவைத்து முடிந்தால் தோலுடனேயே சாப்பிடலாம். கட்லெட் போன்றும் செய்து சாப்பிடலாம். சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வெல்லம், ஏலக்காய் சேர்த்து போளியாகச் செய்து சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள், வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சாதத்தின் அளவைக் குறைத்துக்கொண்டு, சர்க்கரைவள்ளிக்கிழங்கைச் சேர்த்துக்கொள்ளலாம். அதிலுள்ளது காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் என்பதால் பிரச்னை வராது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.