Doctor Vikatan: கிட்னி ஸ்டோன்ஸ்: அறுவை சிகிச்சை தவிர்த்து, சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?
Doctor Vikatan: கிட்னி ஸ்டோன்ஸை சித்த மருந்துகளால் கரைக்க முடியுமா, எந்த அளவுவரை மருந்துகளால் கரைக்கலாம். சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டால் அறுவை சிகிச்சையைத் தவிர்க்க முடியுமா?
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
கிட்னி ஸ்டோன்ஸை கரைக்க, குணப்படுத்த சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள், சிகிச்சைகள் உள்ளன. அந்தக் கற்களின் அளவு, அவை எந்த இடத்தில் உள்ளன என்பதைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும்.
கஷாய வகைகளில் சிறுபீளைக் குடிநீர், நெருஞ்சில் குடிநீர், நீர்முள்ளிக் குடிநீர், மண்டூராதிக் குடிநீர் போன்ற ஏராளமான மருந்துகள் உள்ளன. சிலாசத்து மாத்திரை, குங்கிலிய பற்ப மாத்திரை, கற்கரைச்சி மாத்திரை என மாத்திரைகளும் உள்ளன.
சித்த மருத்துவத்தில் சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் செய்கையைச் செய்யக்கூடிய மருந்துகள், சிறுநீரைப் பெருக்கி வெளித்தள்ளக்கூடிய மருந்துகள் என இரண்டு வகை மருந்துகள் உள்ளன. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, கற்களின் அளவு, அவை இருக்கும் இடம் ஆகியவற்றைப் பொறுத்துதான் சிகிச்சை தீர்மானிக்கப்படும். நாடியும் பார்த்து அதை மருத்துவர் முடிவு செய்வார்.
மருந்துகள் எந்த அளவு உதவுமோ, அதே அளவு உணவியல் மாற்றமும் உதவும். 10 அல்லது 12 மில்லி மீட்டருக்கு மேலான கற்கள் என்றால்தான் அறுவை சிகிச்சை பற்றி யோசிக்கப்படும்.

தாங்க முடியாத வலியைக் கொடுத்தாலோ, சிறுநீர்ப் பாதையில் உராய்வை ஏற்படுத்தி ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறினாலோ, அவசரநிலை கருதி அறுவை சிகிச்சை தேவையா என்பது முடிவு செய்யப்படும். மற்றபடி, நாடி பார்த்துவிட்டு, ஸ்கேன் பரிசோதனையும் செய்து பார்த்துவிட்டு, மருந்துகளின் மூலமே இந்தப் பிரச்னையிலிருந்து மீளலாம்.
சிறுநீரகக் கற்களை குணப்படுத்த மட்டுமன்றி, அவை வராமல் தடுக்கவும் சித்த மருத்துவத்தில் நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, நிறைய நீராகாரம் எடுத்துக்கொள்வது போன்றவற்றைப் பின்பற்றலாம். வெயிலில் அலைவதைத் தவிர்க்கலாம். குறிப்பாக, முதியவர்கள்.... நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். துரித உணவுகளைச் சாப்பிடுவது, கார்பனேட்டடு குளிர்பானங்கள் குடிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பதும் சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.