Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்?
தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்ய ஆறு கண்டெய்னர்களில் சென்னை நகருக்குள் வரும் துப்பாக்கிகள், ஒரு கேஸ் தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்படுகின்றன. அதை அறியும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரி பிஜு மேனன் தலைமையிலான குழு, தொழிற்சாலைக்கு உள்ளே சென்று அவற்றை அழிக்க முடிவெடுக்கிறது. உள்ளே சென்று, அவற்றை வெடிக்க 'சூசைட் ஆபரேஷனுக்கு' ஏற்ற ஆளைத் தேடுகிறார் பிஜு மேனன்.

இந்நிலையில், காதலி மாலதியின் (ருக்மினி வசந்த்) பிரிவால் தொடர்ந்து தற்கொலை முயற்சிகளிலிருக்கும் சாமானியரான ரகுராமை (சிவகார்த்திகேயன்) இந்தத் திட்டத்திற்குப் பயன்படுத்த முடிவெடுக்கிறார் பிஜு மேனன். சாவதற்கு மகிழ்ச்சியாக ரகுவும் சம்மதிக்கிறார். இதன் பிறகு அவர் எடுக்கும் ஆக்ஷன், காதல் அவதாரங்களே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் கதை.
முதற்பாதியில் ஒன்லைன் காமெடி, காதல், இரண்டாம் பாதியில் அதிரடி ஆக்ஷன், அழுத்தமான எமோஷன் என ஆழமாகும் கதாபாத்திரத்தையும், இரண்டாம் பாதியையும் கச்சிதமாக தன் தோளில் சுமந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மனநல ரிதியிலான சவால்களையும், அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும், அழுத்தமாகக் கையாண்டு கவனிக்க வைக்கிறார் சிவா!
தன் அனுபவ நடிப்பால், பரபர காட்சிகளைச் சூடாக்குவதோடு, எமோஷன் மீட்டரையும் ஆங்காங்கே தொட்டுச் சென்று, படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார் பிஜு மேனன்.

தன் அட்டகாசமான ஆக்ஷன், ஸ்டைலிஷ் உடல்மொழியால் கைதட்டல்களைக் குவிக்கிறார் வித்யூத் ஜம்வால். சின்ன சின்ன வில்லனிஸ மேனரிஸத்தால் கவனிக்க வைக்கிறார் சபீர் கல்லரக்கல்.
வழக்கமான காதலியாக வந்து காதல், எமோஷன் ஏரியாவில் ருக்மினி வசந்த்தும், ஆக்ஷன் பரபரப்பிற்கிடையே விக்ராந்த்தும் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
கேஸ் தொழிற்சாலை ஆக்ஷன் காட்சிகள், துறைமுகத்தில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள் போன்றவற்றில் அட்டகாசம் செய்திருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர்கள் கெவின் குமார் மற்றும் திலீப் சுப்புராயன். இதற்கு சுதீப் எலமனின் நேர்த்தியும் பிரமாண்டமான ஒளிப்பதிவும் கைகொடுத்திருக்கிறது.
தன் கட்களால் ஆக்ஷன் காட்சிகளைக் கூர்மையாக்கியதோடு, எமோஷன் காட்சிகளையும் சிதறவிடாமல் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். அனிருத் இசையில், 'சலம்பல', 'தங்கப்பூவே' பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையால், ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோயிஸத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் அனிருத்.

கதாநாயகன் ஓப்பனிங் பாடல், வில்லன்கள் வருகை, காதல் பின்கதை எனக் கொஞ்சம் நிதானமாகவே தொடங்குகிறது படம். கதாநாயகனுக்கு இருக்கும் 'மன மருட்சி கோளாறு (Delusional Disorder)', அதைக் கண்டுபிடிக்கும் கதாநாயகி எனக் காதலோடு, கதாபாத்திரங்களின் சுவாரஸ்யமும் ரசிக்க வைக்கின்றன. நேர்த்தியாகவும் நல்லதொரு திரையனுபவமாகவும் எடுக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை காட்சியிலிருந்து பரபரப்பாகிறது படம்.
வெறும் விசாரணை அமைப்பான என்.ஐ.ஏ எப்படி ஆயுதமேந்திய அமைப்பானது, இவ்வளவு துப்பாக்கிகளை எப்படி தமிழ்நாட்டிற்குள் விநியோகிப்பார்கள், எந்த அழுத்தமான சமூகச் சூழலும் இல்லாமல் எப்படி தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் வரும் எனப் பயப்படுகிறார்கள், சாமானிய மனிதர்கள் சின்ன சின்ன கோவத்திற்கெல்லாம் எப்படி துப்பாக்கி பயன்படுத்துகிறார்கள் என எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகளும், அபத்தங்களும் கதைக்களத்தை நிறைக்கின்றன.
இவற்றைத் தாண்டி, சிவகார்த்திகேயனின் சேட்டைகளோடும், கச்சிதமான திரைக்கதை ட்விஸ்ட்டோடும் இடைவேளை காட்சி பக்காவான தியேட்டர் மெட்டீரியலாக கைதட்டல்களை வாங்குகிறது.
இரண்டாம் பாதி முழுவதும் ஆக்ஷனும், எமோஷனும் மாறி மாறிப் பின்னப்பட்டு, விறுவிறுப்பை முடிந்தளவு விடாமல் பிடித்து நீள்கிறது. ஆக்ஷன் சலிக்கும்போது, எமோஷன் கைகொடுக்க, எமோஷன் இறங்கும்போது ஆக்ஷன் கைகொடுக்க என இறுதிவரை திரைக்கதை சுவாயரஸ்யமாகவே பயணிக்கிறது. ஆனாலும், லாஜிக் மீறல்கள் ஏகத்திற்கு வருவதும், அவற்றைச் சமன்செய்ய நியாயமான காட்சிகள் இல்லாததும் பெரிய மைனஸ்.
இக்குறைகளைக் களைய மனநலச் சவாலுடைய கதாநாயகன் மீது அதீத ஆக்ஷனையும், எமோஷனையும் ஏற்றிவிட்டு, அக்கதாபாத்திரத்தையே குழப்பியியடித்திருக்கிறார் இயக்குநர். மேலும், கதாநாயகனின் மனநலச் சவாலை நோயாகப் பார்க்காமல், அதை வரமாகப் பார்ப்பதாக வசனம் வைத்தது, கதாநாயகனுக்கு இருக்கும் பிரச்னை குறித்து மருத்துவம் படிக்கும் கதாநாயகிக்கு இருக்கும் புரிதலின்மை போன்றவை இரண்டாம் பாதியில் குழப்பத்தையே தருகின்றன.
காதலி கதறுவதைக் கேட்டு மயக்கத்திலிருந்து விழிக்கும் கதாநாயகன், வில்லனோடு மணிக்கணக்காகச் சண்டையிடுவது என வழக்கமான சில கமெர்சியல் காட்சிகள் வந்து போனாலும், அவை தொந்தரவாக அமையாததும், பாதிக்கும் மேலான ஆக்ஷன், எமோஷன் காட்சிகள் திரையரங்கில் கச்சிதமாக ஒர்க் அவுட் ஆவதும் இரண்டாம் பாதியைக் காப்பாற்றுகின்றன.

லாஜிக் மீறல்களும், மேலோட்டமான சில எமோஷன் காட்சிகளும் வரிசை கட்டி வந்தாலும், அவற்றைத் தாண்டி ஆக்ஷன் - காதல் எனும் பரபர சாலையில், விறுவிறுப்போடு கடைசி வரை ஓடி கமெர்சியல் திருப்தியைத் தருகிறது இந்த 'மதராஸி'.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...