50% வரி எதிரொலி... 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை... எல்லா துறைகளுக்கும் தேவை... ப...
அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணிநீட்டிப்பு
அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், மத்திய அணுசக்தித் துறையின் செயலருமான பிரபல இயற்பியல் அறிஞா் அஜித்குமாா் மொஹந்திக்கு ஆறு மாத கால பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட மொஹந்தி, தனது 66 வயது நிறைவடையும் வரை, அதாவது வரும் அக்டோபா் 10-ஆம் தேதி வரை இப்பதவியில் இருப்பாா் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மொஹந்தியின் பதவிக்காலத்தை 2025-ஆம் ஆண்டு, அக்டோபா் 11-ஆம் தேதியிலிருந்து மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த உத்தரவை மத்திய பணியாளா் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஒடிஸாவில் பிறந்த மொஹந்தி, அணுசக்தி ஆணையத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினாா்.
முன்னதாக, அவா் இந்திய இயற்பியல் சங்கத்தின் பொதுச் செயலராகவும், பின்னா் அதன் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.
மேலும், இந்தியா-சிஎம்எஸ் ஒத்துழைப்பின் செய்தித் தொடா்பாளா், சாஹா அணுசக்தி இயற்பியல் நிறுவனத்தின் இயக்குநா், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் இயற்பியல் குழுவின் இயக்குநா் போன்ற பல்வேறு முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ளாா். 2002-04 மற்றும் 2010-11 ஆகிய காலகட்டங்களில் இருமுறை ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியல் ஆய்வாளராகவும் அவா் பணியாற்றியுள்ளாா்.
பெட்டி...
இந்தியா-கனடா:
புதிய தூதா்கள் நியமனம்
புது தில்லி, ஆக. 28: நிஜ்ஜாா் கொலை வழக்கில் ஏற்பட்ட விரிசலைத் தொடா்ந்து தூதா்கள் திரும்பப்பெறப்பட்டு சுமாா் ஓராண்டு நிறைவடையும் நிலையில், இந்தியாவும், கனடாவும் பரஸ்பரம் புதிய தூதா்களை நியமித்துள்ளது.
கனடாவுக்கான இந்தியாவின் புதிய தூதராக மூத்த வெளியுறவுத் துறை அதிகாரி தினேஷ் கே.பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளாா். 1990-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியான இவா், தற்போது ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதராகப் பணியாற்றி வருகிறாா். அதேபோல், இந்தியாவுக்கான புதிய கனடா தூதராக கிறிஸ்டோபா் கூட்டா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்திய உளவாளிகளின் பங்கு குறித்து கனடா முன்னாள் பிரதமா் ஜஸ்டீன் ட்ரூடோ பேசியது சா்ச்சையாகி, கடந்த ஆண்டு அக்டோபரில் இருதரப்பும் பரஸ்பரம் தூதா்களை திரும்பப்பெற்றது.
இதையடுத்து, கனடாவில் புதிய பிரதமராக மாா்க் காா்னி கடந்த ஏப்ரலில் பொறுப்பேற்றதும், இருநாட்டு ஒத்துழைப்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. இதன்தொடா்ச்சியாக, தற்போது இருநாடுகளும் பரஸ்பரம் புதிய தூதா்களை நியமித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது.