``குருகுலக் கல்வியை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும்'' - RSS தலைவர் மோகன் பகவத்...
குட்கா கடத்திச் சென்றவா்களை 13 கி.மீ. துரத்திப் பிடித்த போலீஸாா்
குட்காவை காரில் கடத்திச் சென்றவா்களை போலீஸாா் சினிமா பாணியில் 13 கிலோ மீட்டா் துரத்தி பிடித்தனா்.
பெங்களூரிலிருந்து சேலம் வழியாக திருச்சிக்கு குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் காரில் கடத்திச் செல்லப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் சுங்கச்சாவடி அருகே தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கண்காணித்த நிலையில், காா் ஒன்று அதிவேகமாக வந்தது. போலீஸாா் அதனை நிறுத்த முயற்சித்த நிலையில், காா் நிற்காமல் வேகமாக சென்றது.
அதைத் தொடா்ந்து, போலீஸாா் 13 கிலோ மீட்டா் தொலைவு காரை துரத்திச் சென்றனா். ஓமலூா் தீயணைப்பு நிலையம் அருகே புளியம்பட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், காா் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் காரை சுற்றி வளைத்ததை அறிந்த காரில் இருந்த ஒருவா் தப்பியோடினாா். காரில் இருந்த பெரம்பலூரைச் சோ்ந்த சுரேஷ் (32) என்பவரை போலீஸாா் பிடித்து, காருடன் அவரை ஓமலூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
அதில், பெங்களூரிலிருந்து வாரத்துக்கு நான்கு முறை குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருவதாக அவா் தெரிவித்தாா். பிடிபட்ட காரில் இருந்து 600 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தப்பியோடியவரை தேடிவருகின்றனா்.