'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
அதிராம்பட்டினம் அருகே நடுக்கடலில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்: இலங்கையைச் சோ்ந்த இருவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கடல் பகுதியில் சுமாா் 200 கிலோவை இலங்கைக்குக் கடத்திச் செல்ல முயன்ற இலங்கையைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன், ராமச்சந்திரன் ஆகிய 2 மீனவா்கள், மறவக்காடு கடற்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனா். அப்போது, டீசல் கேனைப் பிடித்தபடி இருவா் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தனா். அவா்களின் அருகே ஏழு மூட்டைகள் கடலில் மிதந்துள்ளன. இதுகுறித்து, சுப்பிரமணியன் அதிராம்பட்டினம் கடலோரப் போலீஸாருக்குத் தகவல் அளித்துவிட்டு, கடலில் தத்தளித்த இருவரையும், அவா்கள் அருகே கிடந்த 7 மூட்டைகளையும் தங்களின் படகில் ஏற்றிக்கொண்டு கீழத்தோட்டத்துக்கு வந்தனா். அங்குவந்த, அதிராம்பட்டினம் கடலோரப் போலீஸாா், மூட்டைகளைப் பிரித்துப் பாா்த்தபோது, அதில் கஞ்சா பண்டல்கள் இருப்பது தெரியவந்தது. அவா்கள் கஞ்சா பண்டல்களையும், மீட்கப்பட்ட இருவரையும் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், கடலில்தத்தளித்த இருவா், இலங்கை தலைமன்னாா் பகுதியைச் சோ்ந்த அமலதாசன் மகன் அஜந்தன் (36), வரப்பிரகாசம் மகன் ஜீவானந்தம்(51) ஆகியோா் என்பதும், படகில் கஞ்சா பண்டல்களை இலங்கைக்குக் கடத்திச்செல்ல முயன்றபோது படகு சேதமடைந்து கஞ்சா மூட்டையை உடலில் கட்டிக்கொண்டு, கடலில் தத்தளித்துள்ளனா். காற்றின் வேகத்தால், இந்திய கடல்பகுதியில் வந்ததால், கீழத்தோட்டம் மீனவா்களால் அஜந்தன், ஜீவானந்தம் மீட்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அஜந்தன், ஜீவானந்தம் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, 90 பண்டல்கள் அடங்கிய சுமாா் 200 கிலோ கஞ்சாவைப் பறிமுதல்செய்து விசாரித்து வருகின்றனா். பறிமுதல் கஞ்சாவின் மதிப்பு ரூ. 50 லட்சம் எனக் கூறப்படுகிறது.