கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
“அந்த 11 பேருக்கு வேலை கொடுக்கறதுக்காகவே... டி.என்.பி.எஸ்.சி மூலமா இந்த அறிவிப்பு!”
‘கருப்பா, குண்டா, குள்ளாமா, சுருட்டை முடியோட இருப்பாரே... அவரைத் தெரியுமா?’ என்று வடிவேலுவிடம், சிங்கமுத்து கேட்கும் சினிமா ஜோக், வெகு பிரபலம். சமீபத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருக்கும் அரசுப் பணிக்கான விளம்பரத்தை இந்த ஜோக்குடன் இணைத்து வேதனையை வெளிப்படுத்து கிறார்கள், பாதிக்கப்பட்டிருக்கும் பலரும்.
மாமல்லபுரத்தில் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக் கல்லூரி இயங்கிவருகிறது. இது ஒன்றுதான் இந்தியாவிலேயே மரபுச் சிற்பக்கலைக்காக இயங்கிவரும் கல்லூரி. ஆனால், இங்கு படித்து வெளியேறும் மாணவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு என்பது, இன்று வரையிலும் கேள்விக்குறியே.
11 பேருக்காக மட்டுமே விதிமுறைகள்!
மாணவர்களின் தொடர் சட்டப் போராட்டங்களை அடுத்து, சில நாட்களுக்கு முன்பு மண்டல ஸ்தபதி பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி மூலம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணிக்குக் குறிப்பிட்ட கால பணி அனுபவம் இருக்க வேண்டும் என்ற தகுதி நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் பின்னணியில்தான் அந்த ஜோக் வேதனை.
``தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 21 மண்டல ஸ்தபதிகள் பணிக்கு, ஏற்கெனவே இதே பணியில் தற்காலிகமாக பணியாற்றும் 11 பேரைத் தவிர வேறு யாருமே விண்ணப்பிக்க முடியாது. அதற்கேற்பவே... பணி அனுபவச் சான்றிதழ், வருகைப் பதிவேடு, ஊதியப் பட்டியல் என ‘கருப்பா, குட்டையா, குண்டா’ என்கிற மாதிரி தெள்ளத்தெளிவாக அந்த 11 பேருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பிறகு எதற்காக தேர்வு என்கிற நாடகம்?’’ என்று கொதிக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தமிழ்நாடு முதல்வர், அறநிலையத்துறை ஆணையர், அமைச்சர் எனப் பலருக்கும் மனு அனுப்பிக் கொண்டுள்ளனர்.

சட்டப் போராட்டத்துக்குப் பின்தான் விடிவு... ஆனாலும்?
இதைப்பற்றி முன்னாள் மாணவர் ஒருவர் பேசும்போது, “இந்தக் கல்லூரியில் படித்தவர்களுக்கு அறநிலையத்துறையில் தலைமை ஸ்தபதி என்ற பதவி உள்பட சில பதவிகள் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் உருவாக்கப்பட்டன. ஆனால், அவையும் உரிய முறைப்படி நிரப்பப் படுவதில்லை. உயரதிகாரிகளுக்குத் தெரிந்தவர்கள், ஆட்சியாளர்களுக்கு அறிமுகமானவர்கள், வேண்டியவர்கள் என்று நியமித்துக் கொள்கிறார்கள். தேர்வு என்பதே இருக்காது. ஒரு சில பணிகளுக்குத் தற்காலிக ஒப்பந்த முறையில் நியமனம் செய்கின்றனர். அந்த வகையில், இந்த 11 பேர், தமிழ்நாடு முழுக்க மண்டல ஸ்தபதிகளாக ஏற்கெனவே தற்காலிக பணியில் உள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிபதியாக இருந்த மகாதேவன், கோயில் சார்ந்த அரசுப் பணிகளை மாமல்லபுரம் கல்லூரியில் படித்த மாணவர் களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். பல ஆண்டுகளாக அந்த உத்தரவு தூங்கிக் கொண்டிருந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சமீபத்தில் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்துதான், 21 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி இப்போது வெளியிட்டுள்ளது. ஆனால், இதற்கான விதிமுறைகள்தான் வேதனையைக் கூட்டுகின்றன’’ என்று நொந்துகொண்டவர், தொடர்ந்தார்...
இது ஒழுங்கமைக்கப்பட்ட துறையல்ல.
‘`கோயில் புனரமைப்பதில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான பணிச் சான்றிதழ், சம்பளப் பட்டியல், வருகைப் பதிவேடு உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை முக்கிய நிபந்தனையாக விதித்துள்ளனர். இதன்படி பார்த்தால், தற்போது தற்காலிகமாக பணியாற்றும் அந்த 11 பேரைத் தவிர, வேறு யாராலுமே விண்ணப்பிக்க முடியவில்லை. இந்தத் துறையானது, கட்டுமானத் துறை போல யார் வேண்டுமானாலும் கான்ட்ராக்ட் எடுத்து பணியாற்றும் நிலையில்தான் இன்று வரையிலும் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனம் போலவோ... சிறு, குறு நிறுவனம் போலவோ இயங்கவில்லை.
இந்தத் துறையின் பணிகள் ஒரு மாதமே, ஒரு வருடமோ, ஐந்து வருடமோ கான்ட்ராக்ட் அடிப்படையில்தான் நடக்கும். அப்படிப் பணியாற்றுபவர்களுக்கு வருகைப் பதிவேடு, சம்பளக் கணக்கு, இ.எஸ்.ஐ, பி.எஃப் என்று எதுவும் கிடையாது. வேலைக்கு வந்தால் சம்பளம் என்கிற நிலைதான். இதை அரசாங்கமும் ஒழுங்குபடுத்தவில்லை. ஒழுங்குபடுத்த முடியுமா என்றும் தெரிய வில்லை. அப்படியிருக்க, பணிச்சான்றிதழ் உட்பட்டவைக்கு நாங்கள் எங்கே போவது?
அறிவிக்கப்பட்டுள்ள 21 பதவிகளுக்கு, தற்போது பணியிலிருக்கும் 11 தற்காலிக மண்டல ஸ்தபதிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அவர்கள் மட்டும்தான், பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் சம்பளம் வாங்குகிறார்கள். அது ஆவணபூர்வமாக இருக்கிறது’’ என்று சொன்னார்.
டாக்டர், இன்ஜினீயருக்கெல்லாம் கேட்கப்படுவதில்லை!
தொடர்ந்த அந்த முன்னாள் மாணவர், ‘`பொதுவாக, ஒரு படிப்பை படித்து விட்டாலே... டி.என்.பி.எஸ்.சி மூலமாக அறிவிக்கப்படும் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். உதாரணமாக, டாக்டர், இன்ஜினீயர் போன்ற பணிகளுக்கு படிப்பு மட்டுமே கேட்கப்படுகிறது. ஆனால், எங்களுக்கு மட்டும் 10 வருட பணி அனுபவம் எல்லாம் கேட்கப்படுகிறது.
கொடுமை என்னவென்றால், மாமல்லபுரம் கல்லூரியில் படித்துவிட்டு வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை, வரலாற்றுத்துறைகளில் உயர்கல்வி கற்றவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்களால்கூட விண்ணப்பிக்க முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளனர். இதில்தான் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. எங்களுடைய கோரிக்கை, இந்தக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற எல்லோருக்குமே தேர்வெழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான். யாருக்குத் தகுதி இருக்கிறதோ அவர்களுக்குப் பணி கிடைக் கட்டும்” என்று சொன்னார்.

அதுவும் நியாயம்தான்... இதுவும் நியாயம்தான்!
மாமல்லபுரம் கல்லூரியின் முதல்வர் கா.ராமனிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, “நீண்டகாலத்துக்குப் பிறகு ஸ்தபதிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. 10 ஆண்டுக்கால பணி அனுபவம் என்கிற வரையறை நல்லதுதான். அதேசமயம், முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக் கைகளிலும் நியாயம் உள்ளது. பணி அனுபவம் சார்ந்து சான்றிதழ், ரசீது போன்றவற்றில் நடைமுறை சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. அதை சீக்கிரம் சரி செய்ய வேண்டும்” என்று மட்டும் பட்டும்படாமல் சொன்னார்.
வழிமுறைகளை உருவாக்காமல் விதிகளைச் சொல்வது நியாயமற்றது!
இதுதொடர்பாக கல்வியாளர் ராஜராஜனிடம் பேசியபோது, “ஒரு கல்லூரி என்று உருவானால், அதன் மாணவர்களுக்கு பணி வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் கடமை. அந்த வகையில், டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு வரவேற்கத் தக்கதே. அதேசமயம், முன் அனுபவம் நிர்ணயிப்பது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. இத்தனை ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்றால்... எங்கு பணியாற்றியிருக்க வேண்டும்? யார் சான்றிதழ் கொடுக்க வேண்டும்? பாரம்பரிய வைத்தியத்தில் (நாட்டு மருத்துவம்) இப்போது தனி அமைப்பு வைத்து சான்றிதழ் வழங்கி வருகின்றனர். இதில் போலியானவர்கள், நல்லவர்களை கண்டறிய இது போன்ற ஒரு அமைப்பு உள்ளது.
அதுபோல இந்த சிற்பக்கலைக்கு ஏதாவது இருக்கிறதா என்பதையெல்லாம் அரசு முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும். அப்படி இல்லாமல், இதுபோன்ற நிபந்தனைகளை விதிப்பது, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே திட்டமிட்டு பணிகளை வழங்குவதற்கான ஏற்பாடாக முடியும் என்கிற அச்சத்தில் நியாயம் இருப்பதையே உறுதிப்படுத்தும்.
அறநிலையத்துறை அமைச்சர், முதலமைச்சர் இந்த விஷயத்தில் கவனத்தைச் செலுத்தி, அனைத்தையும் ஒருமைப்படுத்தக்கூடிய ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதற்குத் தகுந்த வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதைவிடுத்து திடீரென விளம்பரம் கொடுத்துவிட்டு, இஷ்டம்போல விதிமுறைகளை விதிப்பது சரியானது அல்ல’’ என்று சொன்னார்.
பதிலே சொல்லாத பலே கில்லாடி அறநிலையத்துறை!
இதுகுறித்து கருத்தறிய அறநிலையத்துறை ஆணையரை பலமுறை தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை. இதையடுத்து, நம் கேள்விகளை அவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினோம். அதற்கும் பதில் இல்லை.
ம்... ‘கருப்பா, குள்ளமா, குண்டா, சுருட்ட முடி’யோட இருப்பவர்களைத் தெரிந்து வைத்துக்கொண்டே, ‘தெரியுமா... தெரியாதா’ என்று கேட்பவர்களுக்கு, என்னதான் பதில் சொல்ல முடியும்?