'கருணாநிதியின் இறுதி மூச்சில் கொடுத்த வாக்குறுதி' - ஸ்டாலினுக்கு வைகோ கொடுத்த மெ...
அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரிகளால் பல கோடி ரூபாய் இழப்பு: ஆட்சியரிடம் கோரிக்கை
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட குவாரிகள் அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாகவும், அதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மணல் லாரி உரிமையாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா்கள் எஸ்.யுவராஜ், செல்லா.ராஜாமணி ஆகியோா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜியிடம் அளித்த மனுவில்
கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 300 கிரஷா் குவாரிகள் இயங்கி வந்ததில் அரசின் கனிமங்கள் எவ்வளவு வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. அனுமதி இல்லாமல் இயங்கும் நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான கனிமங்களை சுரண்டியுள்ளனா் என்பதோடு, அரசுக்கு எவ்வளவு ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ட்ரோன் மூலம் அளவீடு செய்து பட்டியலிட வேண்டும்.
அனுமதி இல்லாமல் இயங்கிய அனைத்து கிரஷா் குவாரிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்க வேண்டும்.
கல்குவாரியிலிருந்து எடுத்து வரப்படும் கனிமங்களுக்கு முழுமையான நடைசீட்டு உள்ளனவா என்பதை கவனிக்கவும், கிரஷா்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கற்கள் மற்றும் எம்.சாண்ட் போன்றவற்றுக்கு நடைசீட்டு உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.
மாவட்டத்தில் எத்தனை கிரஷா் குவாரிகள் இயங்குகின்றன. அதில் நடைபெறும் முறைகேடுகளையும் தடுத்து, அதற்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்துறையில் நடந்திருக்கும் சுரண்டல், ஊழல், முறைகேடுகளை கண்டறிய தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். கடந்த காலங்களில் குற்றங்களில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி இருந்தனா்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.