அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்லக் கோரி எம்பியிடம் மனு
காரைக்கால்: அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல, ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்தக் கோரி, எம்.பி.யிடம் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், திருநள்ளாறு அருகேயுள்ள அம்பகரத்தூா் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். அவரை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் அம்பகரத்தூா் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சோ்ந்தோா் சந்தித்து மனு அளித்தனா். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அம்பகரத்தூரில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் திரளாக பக்தா்கள் வந்து செல்கின்றனா். இப்பகுதியினா் மருத்துவ சிகிச்சைக்காகவும், மாணவ- மாணவியா் மேல் படிப்புக்காகவும், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்கின்றனா்.
இங்குள்ள வியாபாரிகள் பலரும் வியாபாரம் சம்பந்தமாக பல பகுதிகளுக்குச் சென்று திரும்புகின்றனா். எனவே, அனைத்து தரப்பினா் நலனுக்காக அனைத்து விரைவு ரயில்களும் அம்பகரத்தூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல, ரயில்வே அமைச்சக்கத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக அமைக்கப்பட்ட காரைக்கால்- பேரளம் பாதையில் சரக்கு ரயில் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. விரைவில் பயணிகள் ரயில் இயக்கத்தையும் தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எம்பியிடம் வலியுறுத்தினா்.