அரசு நகரப் பேருந்தில் பெண்களிடம் கட்டணம் வசூல்: தற்காலிக நடத்துநா் பணியில் இருந்து விடுவிப்பு
சத்தியமங்கலம் அருகே அரசு நகரப் பேருந்தில் பெண்களிடம் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரையடுத்து தற்காலிக நடந்துநா் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டியில் இருந்து பவானிசாகா் வழியாக பண்ணாரிக்கு அரசு நகரப் பேருந்து (பி 1) வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டது. இதில், நடத்துநராக தற்காலிகப் பணியாளா் தரணிதரன் பணியில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், அந்தப் பேருந்தில் ஏறிய பெண் பயணிகளிடம் சிறப்புப் பேருந்து எனக் கூறி நடத்துநா் கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, பெண்கள் ஆட்சேபணை தெரிவிக்கவே டிக்கெட் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டாதாகவும் கூறப்படுகிறது. இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து சத்தியமங்கலம் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளரிடம் கேட்டபோது, அரசு நகரப் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலித்ததாக வந்த புகாரையடுத்து, தற்காலிகப் பணியாளரான நடத்துநா் தரணிதரன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா் என்றாா்.