பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
அற்புதங்களை அளிக்கும் அன்னை...
சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, அடிமுடி சித்தர், பாம்பன் சுவாமிகள்,போளூர் விட்டோ சுவாமிகள் உள்ளிட்ட மகான்களோடு பழகியவர் ஸ்ரீ சக்கரத்து அம்மன்.
"எங்கு செல்ல வேண்டுமென்றாலும் பறவை போல பறந்து செல்லும் ஆற்றலை பெற்றவர் சக்கரத்து அம்மையார்' என்று திரு.வி.க. தன்னுடைய நூலிலே பதிவு செய்திருக்கிறார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயமான பெரியநாயகி உடனுறை கனககிரீஸ்வரர் கோயிலில் தொண்டு செய்யும் சிவாச்சாரியார் மகளாக அனந்தாம்பாள் என்ற திருநாமத்துடன்
1854}இல் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் அவதரித்தார். இவரின் தாயார் இளம் வயதில் சிவ பதவி அடைந்துவிட, சிறிய தாயார் அன்பில் வளர்ந்தார். இவர் சிவ ஆகமங்களைப் பயின்று, தேவிகாபுரம் பெரியநாயகி சந்நிதி எதிரில் அமர்ந்து பல மணி நேரம் நிஷ்டையில் இருப்பார்.
அனந்தாம்பாளுக்கு ஒன்பது வயதாகும்போது, சென்னை கோமளீஸ்வரன்பேட்டையில் வசித்த மடாதிபதி சாம்பசிவம் என்பவருக்கு மனைவியாகினார். சில ஆண்டுகளில் கணவர் சிவபதம் அடைந்துவிட, தான் வசித்த வீட்டின் மாடியிலே பத்து ஆண்டுகள் கடும் தவம் இயற்றினார். அப்பொழுது ஸ்படிக லிங்க பூஜையும் , சக்கர பூஜையும் செய்ததால் இவரை "ஸ்ரீ சக்கரத்து அம்மா', என்று அழைத்தனர். இதுவே "சர்க்கரை அம்மா' என்றாகிவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நட்சத்திரக் கோயிலில் உள்ள முருகன் கோயில் அருகே குணாம்பாள் என்ற சித்தரை சந்தித்து, அவரின் அருளுக்கு பாத்திரமாகி பறக்கும் ஆற்றலை பெற்றார். அதுமுதல் இவர் "பறவை அம்மா' என்று அழைக்கப்பட்டார். 1901-இல் மாசி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவர் ஜீவசமாதி அடைந்தார்.
அவருடைய கோயில் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது. இதை தலைமைச் சீடர் மருத்துவர் நஞ்சுண்ட ராவ் பரம்பரையினர் பராமரித்து வருகின்றனர். சக்கரத்து அம்மையின் 171 }ஆம் ஆண்டு ஜெயந்தி விழா, ஆடிப்பூரவிழா ஜூலை 28 (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
"நம்பிக்கையோடு நாடிவருவோருக்கு அதிசயங்களை நிகழ்த்துகிறார். நோய் தீர்த்தல், திருமணத் தடை நீக்குதல், குழந்தை பாக்கியம் அருளுதல் உள்ளிட்ட அற்புதங்களை அளிக்கிறார்' என்கின்றனர் பக்தர்கள்.