துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
ஆடி அமாவாசை: சுருளி அருவியில் குளிக்க அனுமதி!
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று வனத்துறையினர் தடையை நீக்கினர்.
தேனி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலா, ஆன்மிகத் தலமாக சுருளி அருவி இருக்கிறது. இங்கு நாள்தோறும் திரளான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும், ஆடி அமாவாசை நாளில் இந்த அருவியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கப்படும். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் வருவாா்கள்.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு, தூவானம் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 19-ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா். இந்தத் தடை 5-ஆவது நாளான புதன்கிழமையும் தொடா்ந்தது.
இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (ஜூலை 24) ஆடி அமாவாசை என்பதால், அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை அடுத்து சுருளி அருவியில் நீர்வரத்து சற்று குறைந்த நிலையில் ஆடி அமாவாசை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். கடந்த 5 நாள்களாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் சுருளி அருவியில் நீராடினர்.
மேலும், ஆடி அமாவாசை முன்னிட்டு சுருளி அருவியில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.