பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
ஆணவக் கொலைகள் தடுக்கும் வழிமுறைகள் குறித்து முதல்வரிடம் பேசுவேன் -அமைச்சா் துரைமுருகன்
தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதல்வரிடம் பேசுவேன் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட6, 7-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் காட்பாடியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று மனு அளித்த பயனாளிகளுக்கு அதற்கான ஆணைகளை வழங்கி பேசுகையில், முந்தைய ஆட்சியில் மக்கள்தான் நலத்திட்டங்களை தேடி அரசு அலுவலகங்களுக்கு செல்வதுதான் வழக்கம். ஆனால், திமுக ஆட்சியில் மக்களிடம் நேரில் சென்று மனுக்களைப் பெற்றுத் திட்டங்களை வழங்குகிறது. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
திமுகவில் என்னை ஒதுக்குகின்றனா் என்று பாமக தலைவா் அன்புமணி கூறியுள்ளாா். நான் ஒதுக்கப்படுகிறேனா, இல்லையா என்பதை நான் தான் கூறவேண்டுமே தவிர, அன்புமணி அல்ல.
பாஜக கூட்டணியும் அதிமுக கொள்கையும் வேறுபடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கா் ஒட்டுவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதா, கல்லூரி மாணவா்க ளுக்கு உதவித்தொகை ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதா?. திமுக பல புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. ஆணவப் படுகொலைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முதல்வரிடம் பேசுவேன் என்றாா்.
இதில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணைமேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.