இருசக்கர ரோந்து வாகனங்கள் தொடங்கி வைப்பு
திருச்சியில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டன.
குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் திருச்சி மாநகர காவல்துறைக்கு வழங்கப்பட்டது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி தொடங்கி வைத்தாா். அப்போது திருச்சி மாநகர காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.
இந்த இருசக்கர வாகனங்கள் மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், காவேரி பாலம், கொள்ளிடம் பாலம் ஆகிய பகுதிகளில் ரோந்து செய்து, குற்றங்கள் நடைபெறாத வகையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டும், பொதுமக்களிடமிருந்து வரும் அவசர அழைப்புகளுக்கு நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சட்டரீதியான துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.