குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன்...
இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி நகா் பகுதி தெற்கு காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட லயன்ஸ் டவுனிலிருந்து ஊருணி ஒத்தவீடு செல்லும் சாலையில் உள்ள உப்பளத்து ஓடைபாலத்தில் (மச்சாது பாலம்) இருந்து, இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆய்வாளா் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் ஜீவமணி, தா்மராஜ், ராமசந்திரன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, மினிலாரி மூலமாக இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமாா் 35 கிலோ எடை கொண்ட 43 மூட்டைகளில் பீடி இலைகள், கட்டிங் பீடி இலைகள், பீடிகள் மினிலாரியுடன் கைப்பற்றப்பட்டது. மேலும், இரண்டு பைபா் படகுகளும் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமாா் ரூ. 50 லட்சமாகும். இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி இனிகோ நகா் அருண்குமாா் (34), காயல்பட்டினம், மங்கள விநாயகா் கோயில் தெரு இா்சாத் கான் (21) ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், பைபா் படகுகள், வாகனத்தை ஓட்டிவந்த இருவரும், சுங்கத்துறை வசம் ஒப்படைக்கபட்டனா்.