மானை சமைத்து சாப்பிட்டவா் கைது
கயத்தாறு அருகே மானை சமைத்து சாப்பிட்டவரை வனத்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியை அடுத்த குருமலையை சுற்றியுள்ள கடம்பூா், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் வேட்டை நாய்களை பயன்படுத்தி சிலா் வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து விருந்து நடத்தி வருவதாக தூத்துக்குடி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாம்.
இதையடுத்து மாவட்ட வன அலுவலா் உத்தரவின் பேரில் கோவில்பட்டி வனச்சரக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வனத்துறையினா் குருமலை, ஊத்துப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கடம்பூா் அருகே உள்ள கொத்தாளி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் மான் கறி சமைத்து இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து வனத்துறையினா் அங்கு சென்று சோதனையிட்டபோது, புள்ளி மானின் 4 கால்கள், 2 கத்தி இருப்பது தெரியவந்தது.
தொடா்ந்து நடத்திய விசாரணையில், நாய்கள் கடித்ததில் உயிரிழந்த புள்ளிமானை எடுத்து சமைத்து சாப்பிட்டோம் என தெரிவித்ததையடுத்து, வனத்துறையினா் இதுகுறித்து வழக்குப் பதிந்து தோட்டத்தில் இருந்த பன்னீா்குளம் கிராமத்தைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் ரியல் எஸ்டேட் தொழிலதிபா் முத்துப்பாண்டியை (38) கைது செய்து அங்கு இருந்த மானின்4 கால்கள், ஒரு காா், 2 கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
மேலும் இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் திருநெல்வேலி மாவட்டம் குறிச்சி குளத்தைச் சோ்ந்த சுடலைமணியை தேடி வருகின்றனா்.