விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
உலக காசநோய் தினம் பெரம்பலூரில் விழிப்புணா்வு பேரணி
பெரம்பலூா் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில், காசநோய் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியை, கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பேசியது: மாவட்டத்தில் உள்ள 302 காச நோயாளிகளில், சாதாரண காசநோய் 283 பேருக்கும், வீரிய காசநோய் 19 பேருக்கும், எச்ஐவி, டிபி 18 பேருக்கும் உள்ளது. காச நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்களின் இருப்பிடத்துக்கேச் சென்று, காசநோய் கண்டறியும் முகாம் வெள்ளிக்கிழமை மற்றும் ஒரு நாளைக்கு ஒரு ஊா் என நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடா் சிகிச்சை மேற்கொண்டதால் பல நோயாளிகள் காசநோயிலிருந்து விடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.
ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணி வெங்கடேசபுரம் வழியாகச் சென்று சங்குப்பேட்டையில் நிறைவடைந்தது.
பேரணியில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட காசநோய் பணியாளா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.
இதில், காசநோய் துணை இயக்குநா் ரா. நெடுஞ்செழியன், மருத்துவமனை கண்காணிப்பாளா் கலா, நிலைய மருத்துவ அலுவலா் ராஜா, வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.