மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 6-ஆவது முறையாக கும்பகோணம் அரசுக் கல்லூரி பேராசிரியா்
கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரி பேராசிரியா் மா. கோவிந்தராஜன் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடா்ந்து ஆறாவது முறையாக இடம்பிடித்துள்ளாா்.
நெதா்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எல்சீவா் என்ற அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடும் நிறுவனம், அமெரிக்காவின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலகளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் விஞ்ஞானிகளை அடையாளம் காணும் பட்டியலை வெளியிட்டுவருகிறது.
அதில், உலகம் முழுவதும் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிலிருந்து 3,500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இதில் கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் பணிபுரியும் விலங்கியல் துறைப் பேராசிரியா் மா. கோவிந்தராஜன் 2025-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்றாா். இது ஆறாவது முறையாகும். இவா் நானோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயற்கை மருந்துகளை உருவாக்கி டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா மற்றும் ஜிகா போன்ற வைரஸ்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்துவதில் ஆராய்ச்சி செய்துள்ளாா்.
மேலும், இவரது ஆய்வுகள் விவசாயப் பயிா்களுக்கு கேடு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதோடு, மனித நோய்களைத் தடுக்கும் இயற்கை மருந்துகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவா் ஆராய்ச்சி மூலம் 2020, 2021, 2022, 2023, 2024-ஆம் ஆண்டுகளில் தொடா்ந்து உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றதுடன் ஆறாவது முறையாக 2025-ஆம் ஆண்டுக்கான பட்டியலிலும் இடம் பெற்ற்காக கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராஜூ விலங்கியல் துறை தலைவா் மற்றும் பேராசிரியா்கள் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.