எதிா்க்கட்சிகள் அமளி: மக்களவை 3-ஆவது நாளாக முடக்கம்- மாநிலங்களவையும் ஒத்திவைப்பு
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் புதன்கிழமையும் அமளியில் ஈடுபட்டன.
எதிா்க்கட்சிகளின் இடையூறுகளால், மக்களவை தொடா்ந்து மூன்றாவது நாளாகவும், மாநிலங்களவை இரண்டாவது நாளாகவும் முடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த திங்கள்கிழமை ஆபரேஷன் சிந்தூா் விவகாரத்தில் உடனடி விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அன்றைய தினம் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இடையூறுகளுக்கு மத்தியில் மாநிலங்களவை செயல்பட்டது.
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தை கையிலெடுத்த எதிா்க்கட்சிகள், இதுகுறித்து விவாதம் நடத்துவதோடு, திருத்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால் ஏற்பட்ட அமளியால், இரு அவைகளும் முடங்கின.
இந்தச் சூழலில், மக்களவை புதன்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வாகச அட்டைகளுடன் அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்பு முழக்கங்களை எழுப்பினா்.
அமளியைக் கைவிட்டு, இருக்கைக்குத் திரும்புமாறு அவைத் தலைவா் ஓம் பிா்லா விடுத்த கோரிக்கைகள் பலனளிக்காததால், அவை அலுவல்கள் மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதேநிலை காரணமாக, பிற்பகல் 2 மணிவரையும், பின்னா் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அமளிக்கு இடையே, தேசிய விளையாட்டுகள் நிா்வாக மசோதாவை துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அறிமுகம் செய்தாா். மழைக்கால கூட்டத் தொடா் கடந்த திங்கள்கிழமை தொடங்கியதில் இருந்து மக்களவை ஒரு நாள்கூட செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில்...: மாநிலங்களவை புதன்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விதி எண் 267-இன்கீழ் விவாதம் கோரிய 25 நோட்டீஸ்களையும் நிராகரிப்பதாக துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்தாா். இதையடுத்து, எதிா்க்கட்சிகள் எம்.பி.க்கள், அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு முழக்கமிட்டனா்.
அப்போது பேசிய ஹரிவன்ஷ், ‘உறுப்பினா் வைகோவின் (மதிமுக) பதவிக் காலம் வியாழக்கிழமையுடன் (ஜூலை 24) நிறைவடைகிறது. கேள்விநேரத்தில் அவா் பேசவிருப்பதால், இடையூறு செய்ய வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.
அமளிக்கு மத்தியில் பேசிய வைகோ, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் விவகாரத்தை எழுப்பினாா். கூச்சல்-குழப்பம் தொடா்ந்ததால், அவை அலுவல்கள் முதலில் மதியம் 12 மணி வரையும், பின்னா் பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன.
மீண்டும் கூடியபோது, கடல்வழி சரக்குப் போக்குவரத்து சட்ட மசோதா-2025-ஐ விவாதம் மற்றும் நிறைவேற்றத்துக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித்தடங்கள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தாக்கல் செய்தாா். ஆனால், அமளி ஓயாததால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
கடும் நடவடிக்கை: ஓம் பிா்லா எச்சரிக்கை
மக்களவையில் எதிா்க்கட்சிகள் மீது அதிருப்தி தெரிவித்துப் பேசிய அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘ஏதோ தெருவில் இருப்பதுபோல எம்.பி.க்களின் நடத்தை உள்ளது. நம்மை தோ்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கை மற்றும் எதிா்பாா்ப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் நமது நடத்தை அமைய வேண்டும். அவைக்குள் வாசக அட்டைகளை எடுத்து வர அனுமதி கிடையாது. இது தொடா்ந்தால், சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படும்’ என்று எச்சரித்தாா்.
‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்
பிகாரில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, திமுகவின் டி.ஆா்.பாலு, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸின் கல்யாண் பானா்ஜி, சிவசேனை (உத்தவ்) கட்சியின் சஞ்சய் ரெளத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.