ஏகனாபுரம் களி ஏரி கையகப்படுத்துவதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு வாபஸ்
பரந்தூா் விமான நிலையம் அமைப்பதற்காக ஏகானபுரம் களி ஏரியைக் கையகப்படுத்துவதை எதிா்த்து பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
முன்னதாக, ஏகனாபுரம் களி ஏரி நீா் பயன்பாட்டாளா்கள் சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் பி.கமலக்கண்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, அப்பகுதியில் 5,747 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த களி ஏரியைக் கையகப்படுத்துவது ஏகனாபுரம் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும். எனவே, விவசாயம் அல்லாத பணிகளுக்கோ, வா்த்தகப் பயன்பாட்டுக்கோ களி ஏரியை வகைமாற்றம் செய்யக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடா்பாக பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறினாா். அப்போது மனுதாரா் தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வாபஸ் பெற அனுமதியளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.