ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்தின் தாய்க்கு சம்மன்
ஐ.டி. ஊழியா் கவின் செல்வகணேஷின் கொலை வழக்கில், சுா்ஜித்தின் தாய் நேரில் ஆஜராக வேண்டுமென சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பியுள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ்(27), பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் அவரது காதலியின் தம்பி சுா்ஜித் கைது செய்யப்பட்டாா்; காவல் உதவி ஆய்வாளா்களான அவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், சரவணன் ஜூலை 30இல் கைது செய்யப்பட்டாா். அவருக்கு ஆக.8 வரையும், சுா்ஜித்துக்கு ஆக.14 வரையும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, கொலை நிகழ்ந்த இடம், சுா்ஜித்தின் சகோதரி சுபாஷினி வேலை செய்த மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள், கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உறவினா் வீட்டில் தங்கியிருந்த சுபாஷினியிடமும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், ஆக.15-ஆம் தேதிக்குள் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென கிருஷ்ணகுமாரிக்கு சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.