ஒரே குளத்தில் ஊறிய எடப்பாடியும் ஸ்டாலினும்... வீணாகிக்கொண்டே இருக்கும் நெல் மூட்டைகளும்!
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
தலையில் பச்சைத் துண்டைக் கட்டிக்கொண்டு, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... விவசாயிகளுக்கு அதைச் செய்வோம்... இதைச் செய்வோம்’ என்று முழங்கியபடி ஊர் ஊராகச் சுற்றிவருகிறார், முன்னாள் முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
இதே வசனத்தை ஓங்கி ஒலித்தபடி, இதேபோல பச்சைத்துண்டுடன் 2021 தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டை வலம் வந்தார், இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
இப்படி முழங்குவதைத் தவிர, இருவருமே விவசாயிகளுக்குப் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்பதற்கு, ஒரு சோறு பதம்... பல ஆண்டுக்காலமாகவே மழையில் நனைந்து முளைவிட்டுக் கொண்டிருக்கும் நெல் மூட்டைகள்தான்.
‘தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 15,000 நெல் மூட்டைகள், கடந்த சில தினங்களுக்கு முன் மழையில் நனைந்து வீணாகியுள்ளன’ என்று செய்தி வெளியாகியுள்ளது.
‘நெல் மூட்டைகளை பாதுகாப்பாகச் சேமிப்பதற்குப் போதுமான குடோன்களும் தார்ப்பாய்களும் வேண்டும்’ என்று பல ஆண்டுகளாக விவசாயிகள், தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், மழையில் நெல் மூட்டைகள் நனைவது வாடிக்கையாகவே இருக்கிறது.
படாதபாடுபட்டு உழைத்து, கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைவதால், விவசாயிகளுக்கு மட்டுமா நஷ்டம்... நாட்டிலிருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பேரிழப்பு! கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல் மூட்டைகளை, பாதுகாப்பாகச் சேமிக்க, போதுமான கிடங்குகள்கூட இந்த இரு கட்சியின் ஆட்சியிலும் கட்டப்படவில்லை என்பதுதான் கள யதார்த்தம்.
‘பச்சைத் துண்டு போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல. செயலில்தான் எங்களுடைய விவசாயிகளின் மீதான அக்கறை இருக்கும்’ என்று மார்தட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் மழையின்போது நெல் மூட்டைகள் தொடர்ந்து மழையில் மூழ்குவதை ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்?
‘ஸ்டாலின் ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்’ என்று பேசும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், போதுமான நெல் சேமிப்புக் குடோன்கள் கட்ட நடவடிக்கை எடுக்காமல் தூங்கியது ஏன்?
‘தி.மு.க வரக்கூடாது’ என்று அ.தி.மு.க-வுக்கும், ‘அ.தி.மு.க வரக்கூடாது’ என்று தி.மு.க-வுக்கும் மாறிமாறி ஓட்டு போடுகிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தமர்ந்தபின், கொஞ்சம்கூட மாறாமல், ‘விவசாயிகளுக்கு நன்மை செய்துவிடக் கூடாது’ என்கிற ஒரே கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன, இருகட்சிகளும்.
ம்... ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள்தானே இரண்டும்!
- ஆசிரியர்