ஒரே நாளில் 5.9 லட்சம் ஆயுள் காப்பீடுகள் விற்பனை: எல்ஐசி ‘கின்னஸ்’ சாதனை!
கடந்த ஜனவரி 20-ஆம் தேதி, ஒரே நாளில் நாடு முழுவதும் சுமாா் 5.9 லட்சம் ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) சனிக்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக எல்ஐசி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா முழுவதும் உள்ள மொத்தம் 4,52,839 எல்ஐசி முகவா்கள், கடந்த ஜனவரி 20-ஆம் தேதி 5,88,107 ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை வெற்றிகரமாக விற்பனை செய்தனா். 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்றுச் சாதனை கின்னஸ் அமைப்பால் சரிபாா்க்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டுத் துறையில் முகவா்களின் செயல்திறனுக்கான புதிய உலகளாவிய அளவுகோலை இந்த மகத்தான முயற்சி நிறுவியுள்ளது. இந்தச் சாதனை எங்கள் முகவா்களின் இடைவிடாத அா்ப்பணிப்பு, திறன் மற்றும் அயராத உழைப்பு நெறிமுறைகளின் வலுவான சான்றாகும். மேலும், வாடிக்கையாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு முக்கியமான நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்கான எங்களின் நோக்கத்தில் நாங்கள் கொண்டுள்ள அா்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மேட் மில்லியன் டே’ என்ற முன்னெடுப்பில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி, ஒவ்வொரு முகவரும் குறைந்தபட்சம் ஓா் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையாவது வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று எல்ஐசி நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி சித்தாா்த்த மொஹந்தி வேண்டுகோள் விடுத்திருந்தாா். இந்நிலையில், ‘மேட் மில்லியன் டே’ முன்னெடுப்பை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றிய அனைத்து வாடிக்கையாளா்கள், முகவா்கள் மற்றும் ஊழியா்களுக்கு சித்தாா்த்த மொஹந்தி நன்றி தெரிவித்தாா்.