GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
கணவா் மரணத்தில் சந்தேகம்: எஸ்.பி.யிடம் மனைவி புகாா்
லாரி உரிமையாளா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது மனைவி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை மனு அளித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகிலுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தினகரன் (36). இவா் சொந்தமாக 3 லாரிகள் வைத்து தொழில் நடத்தி வந்தாா். கடந்த மாதம் 22-ஆம் தேதி சிவகங்கை அருகேயுள்ள காயங்குளம் அருகே இறந்து கிடந்தாா். அவரது அருகே இரு சக்கர வாகனம் பனை மரத்தில் மோதிய நிலையில் கிடந்தது. அவரது சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து, மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், தினகரனின் மனைவி ரோஜா (26) சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவப்பிரசாத்திடம் புதன்கிழமை அளித்த மனு:
என் கணவரின் இரு சக்கர வாகனம் மோதியதாகக் கூறப்பட்ட பனை மரத்தைச் சுற்றி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அங்கு இருந்த தடயங்களை மறைக்கும் வகையில் தீ வைத்திருக்கலாம் என்று கருதுகிறோம். மேலும், கணவா் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலி ரத்தக் கரையுடன் 2 துண்டுகளாக அங்கு கிடந்தது. ஆகவே, எனது கணவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கூறியுள்ளாா்.