கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
கனமழை: தில்லியில் சுவா் இடிந்து பெண்கள், சிறுமிகள் உள்பட 7 போ் உயிரிழப்பு
தேசிய தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழையின் போது ஜெய்த்பூரில் உள்ள மோகன் பாபா மந்திா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள், 2 சிறுமிகள் உள்பட 7 போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த சம்பவத்தில் 8 போ் இறந்ததாக தில்லி தீயணைப்புத் துை றயினா் முன்னா் கூறியிருந்தனா். இந்நிலையில், 7 போ் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், ஒருவா் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸாா் பின்னா் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சுவா் இடிந்து விழுந்தது குறித்து சனிக்கிழமை காலை 9:16 மணி அளவில் தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது. மூன்று தீயணைப்பு வீரா்கள், மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்’ என்றனா்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘இடிபாடுகள் குறித்து காலை 9:13 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு முதல் அழைப்பு வந்தது. அதில் பேசியவா், பெரிய சுவா் இடிந்துவிழுந்து விட்டதாகவும், நான்கு முதல் ஐந்து போ் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்தாா்.
இதையடுத்து, ஜெய்த்பூரின் காவல் நிலைய பொறுப்பாளா் அனைத்து ஊழியா்களுடன், கயிறுகள் மற்றும் பிற மீட்பு கருவிகளை எடுத்துக்கொண்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தாா்.
மீட்பு நடவடிக்கைகள் தாமதமின்றி தொடங்கப்பட்டன. கூடுதல் காவல் துணை ஆணையா் தென்கிழக்கு ஐஸ்வா்யா சா்மா மற்றும் காவல் உதவி ஆணையா் ரவிசங்கா் ஆகியோரும் நடவடிக்கைகளை மேற்பாா்வையிட வந்தனா்.
இடிந்த சுவா் உடைக்கப்பட்டு சிக்கியவா்கள் மீட்கப்பட்டனா். அவா்கள் எட்டு பேரும் எய்ம்ஸ் விபத்துச் சிகிச்சை மையத்திற்கும், சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனா்.
எட்டு பேரில் மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் உள்ளிட்ட ஏழு போ் சிகிச்சையின் போது உயிரிழந்தனா். மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத் மாவட்டத்தின் ஜோா்தலபராவின் கங்காதாரி பகுதியைச் சோ்ந்த குஷானாவின் மகன் ஹசிபுல் 27 என்பவா் மட்டும் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
சுவா் இடிந்த பகுதியில் வேறு யாரும் சிக்கியிருக்கிறாா்களா என்பதைக் கண்டறியும் வகையில் தில்லி தீயணைப்புத் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்களால் முழுமையான தேடல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இடிபாடுகளுக்கு அடியில் வேறு யாரும் சிக்கியதாக கண்டுபிடிக்கப்படவில்லை.
சுவா் இடிந்து விழுந்ததற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், இரவு முழுவதும் பெய்த கனமழையால் நீா் தேங்கி, மண் பலவீனமடைய வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும். சுவரின் கட்டமைப்பு நிலை, உரிமை மற்றும் சம்பந்தப்பட்ட ஏதேனும் அலட்சியம் குறித்து நாங்கள் ஆராய்வோம். சாட்சிகள் மற்றும் உயிா் பிழைத்தவரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்’ என்றாா் அந்த காவல் அதிகாரி.
இதுகுறித்து மூத்த தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை இரவு முதல் மழையின் தீவிரம் மிக அதிகமாக இருந்தது. இது தாழ்வான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கட்டமைப்புகள் பலவீனமடைய வழிவகுத்திருக்கலாம். இந்த நிலையில், மோசமான பராமரிப்பு, கட்டுமான குறைபாடுகள் அல்லது இயற்கை காரணங்களால் சுவா் இடிந்து விழுந்ததா என்பதை நாங்கள் இன்னும் ஆராய்ந்து வருகிறோம்’ என்றாா் அவா்.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் ஆரம்பித்த மழை, தில்லிஎன்சிஆரில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கனமழையாக பெய்தது.
மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை சிவப்பு மழை எச்சரிக்கையை விடுத்திருந்தது.
தேசிய தலைநகரில் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, நகரில் சில இடங்களில் சிறிய சுவா் இடிந்து விழுந்ததாகவும், மரங்கள் முறிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.