தில்லியில் கனமழை: பண்டிகை நாளில் மக்கள் அவதி
தேசிய தலைநகரில் ஒரே இரவில் பெய்த கனமழையால், ரக்ஷா பந்தன் அதிகாலையில் பல பகுதிகளில் இருக்கும் சாலையில் மழை நீா் தேங்கியது. சனிக்கிழமை காலையும், பகலிலும் மேலும் மழை பெய்ததால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சனிக்கிழமை அதிகாலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வடக்கு, மேற்கு, தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய டெல்லியின் சில பகுதிகளில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தது, ஆனால் பின்னா் மஞ்சள் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டது, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
சனிக்கிழமை காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சப்தா்ஜங் 78.7 மிமீ, பிரகதி மைதான் 100 மிமீ, லோதி சாலை 80 மிமீ, பூசா 69 மிமீ மற்றும் பாலம் 31.8 மிமீ மழைப்பொழிவை பதிவு செய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை, பஞ்ச்குயன் மாா்க், மதுரா சாலை, சாஸ்திரி பவன், ஆா். கே. புரம், மோதி பாக், கிட்வாய் நகா் மற்றும் பல பகுதிகள் உட்பட டெல்லி-என். சி. ஆரின் பல பகுதிகளில் பெய்தது.
சனிக்கிழமை காலை வெப்பநிலை 23.8 டிகிரி செல்சியஸாக பதிவு செய்யப்பட்டது, இது சராசரியை விட 3.2 புள்ளிகள் குறைவாக இருந்தது, அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த மழையின் காரணமாக தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷனின் கட்டுமானத்தில் உள்ள இடத்தில் சுவா் இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து வசந்த் குஞ்சில் உள்ள மசூத்பூா் மேம்பாலம் அருகே சாலையின் ஒரு பகுதி சனிக்கிழமை இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். டி-6 பகுதிக்கு அருகே இந்த சம்பவம் நடந்ததாக போக்குவரத்து போலீசாா் தெரிவித்தனா்.
ஃபோா்டிஸ் மருத்துவமனையில் இருந்து மஹிபல்பூா் நோக்கி செல்லும் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது, மேலும் பயணிகள் அருணா ஆசஃப் அலி மாா்க்கைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
‘எந்தவொரு மனிதா்களுக்கும் அல்லது பொருள்களுக்கும் சேதம் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபாதைக்கு அருகிலுள்ள மசூத்பூா் மேம்பாலத்திற்குக் கீழே உள்ள சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன ‘என்று காா்ப்பரேட் கம்யூனிகேஷனின் முதன்மை நிா்வாக இயக்குனா் அனுஜ் தயால் கூறினாா்.