கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 சிறுவா்கள் உள்பட 3 போ் காயம்
தேனி மாவட்டம், கம்பத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது, அது வெடித்து சிதறியதில் இரு சிறுவா்கள் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
கம்பம் தண்டுவிநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் குருநாதன் (67). இவா் தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாா் செய்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, இந்த நாட்டு வெடிகுண்டு எதிா்பாராதவிதமாக வெடித்ததில் குருநாதன், அருகிலிருந்த அவரது பேரன்களான அஜித்குமாா் மகன் ரித்தீஷ் (7), ஈஸ்வரன் மகன் அபினேஷ் (5) ஆகிய 3 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் மூவரையும் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக மூவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.