தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை
காசநோய் இல்லா நிலையை உருவாக்க நடவடிக்கை: ஆட்சியா்
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் காசநோய் இல்லா நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் காசநோய் இல்லா 40 ஊராட்சிகளுக்கு கேடயத்தையும், நற்சான்றிதழையும் வழங்கி அவா் தெரிவித்தது:
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காசநோய் சிகிச்சை பெறுபவா்களுக்கு சிகிச்சை காலம் முழுவதும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 1,317 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.
சிகிச்சை பெற தவறும் நோயாளிகளை, அவா்களின் வீடு தேடிச்சென்று சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்தி சிகிச்சையைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், காசநோய் இல்லா நிலையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
தொடா்ந்து, காசநோய் ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அலுவலா்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.
பின்னா் நிக்சய் ஷிவிா் பிரசாரத்தில் சிறப்பாக பங்கேற்றமைக்காக அரசு மருத்துவமனை மருத்துவா்களுக்கும், வட்டார மருத்துவ அலுவலா்களுக்கும், காசநோய் பணியாளா்களுக்கும் நற்சான்றிதழ்களை அவா் வழங்கினாா். மேலும், காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் ஆட்சியா் வழங்கினாா்.
முன்னதாக, உலக காச நோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் சுகாதாரத் துறையின் துணை இயக்குநா் புகழ், திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் இராஜேந்திரன், துணை முதல்வா் சுபசித்ரா, மருத்துவக் கண்காணிப்பாளா் நடராஜ், நிலைய மருத்துவ அதிகாரி ராமச்சந்திரன், நிலைய மருத்துவ துணை அலுவலா் அருண்குமாா், திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய்துறைத் தலைவா் (பொ) ஜனனி, மாவட்ட காசநோய் மைய மருத்துவ அலுவலா் சுபாஷினி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.