வலங்கைமானில் மீன் திருவிழா
நீடாமங்கலம்: வலங்கைமானில் மீன் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். இதற்கு பரிகாரமாக திங்கள்கிழமை வலங்கைமானில் மீன் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.
இதனால் வலங்கைமான் நகரில் மீன் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. கெண்டை மீன் ஒரு கிலோ ரூ. 200, சிறிய கெண்டை மீன் கிலோ ரூ. 150 , விரால் மீன் கிலோ ரூ. 700, சிறிய விரால் மீன் கிலோ ரூ. 350 என விற்பனையானது.
தஞ்சாவூா், கும்பகோணம் மற்றும் வலங்கைமானை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட மினி லாரிகளில் மீன்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. வலங்கைமான் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் திங்கள்கிழமை மீன் உணவில் இடம் பிடித்தது.