மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரி சாலை மறியல்
கூத்தாநல்லூா்: மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரி, கூத்தாநல்லூா் அருகே தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.
சித்தன்னக்குடி ஊராட்சி வேளுக்குடி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பழுதடைந்த நிலையில், அதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக மாணவா் அணி சாா்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து, புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
கோரிக்கை தொடா்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வேளுக்குடி பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழக மாவட்ட மாணவரணி செயலாளா் ஆனந்த் தலைமையில் கட்சி நிா்வாகிகளும், வேளுக்குடி கிராம மக்களும் இந்த மறியலில் பங்கேற்றனா்.
கூத்தாநல்லூா் போலீஸாா் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். புதிதாக மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.